மதுரை மத்திய தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் மதார் பதூர்தீன் தேர்தல் அலுவலரிடம் இருந்து வெற்றி சான்றிதழ் பெறுகிறார்.
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை: மதுரை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளில் 4 தொகுதிகளில் தவெகவில் சேர்ந்து திடீர் வேட்பாளரானவர்கள் 4 பேர் வென்ற சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி, மேலூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய 10 தொகுதிகள் உள் ளன. இதில் தவெக சார்பில் 10 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில் மதுரை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளராக பீட்டர் ஜோ என்பவர் அறிவிக்கப்பட்டார். அத்தொகுதியில் சவுராஷ்டிரா சமூகத்தினர் அதிகமாக உள்ளதால், அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும் என அக்கட்சி தலைமையிடம் வலியுறுத்தப்பட்டது.
அதன்படி சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த கோபிசன் அறிவிக்கப்பட்டார். அதே சமூகத்தைச் சேர்ந்தவர் நாதக சார்பில் போட்டியிட்ட நிலையிலும் தவெக வேட்பாளர் கோபிசன் வெற்றி பெற்றார்.
சோழவந்தான் (தனி) தொகுதியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பையா, அதிமுக சார்பில் வாய்ப்பு கேட்டார். ஆனால் அக்கட்சி சார்பில் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் அறிவிக்கப்பட்டார். இதனால் அதிமுகவில் வாய்ப்பு கிடைக்காத ஏமாற்றத்தில் கருப்பையா தவெகவில் சேர்ந்து திடீர் வேட்பாளரானார்.
அவர் தற்போது சோழவந்தான் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார். தற்போதைய திமுக வேட்பாளர் வெங்கடேசனை தோற் கடித்துள்ளார். அதேபோல், திருப்பரங்குன்றம் திமுக முன்னாள் ஒன்றியச் செயலாளரும், அழகிரி ஆதரவாளருமான கார்த்தி கேயன், தவெகவில் சேர்ந்த வுடன் மதுரை கிழக்கு தொகுதி தவெக வேட்பாளரானார்.
இதில் அமைச்சர் பி.மூர்த்தியை எதிர்த்து களம் கண்டார். இங்கு அதிமுக வேட்பாளராக மாங்குளம் மகேந்திரன் போட்டி யிட்டார். இதில் தவெக வேட்பாளர் கார்த்திகேயன் வெற்றி பெற்றுள்ளார்.
மதுரை மத்திய தொகுதி தவெக வேட்பாளர் மதார் பதூருதீன் என்ற முஸ்தபாவின் சொந்த ஊர் தேனி மாவட்டம் உத்தமபாளையம். ஆனால் சென்னையில் வசித்து வருகிறார். விஜய் ரசிகரான இவர், தவெக கட்சி ஆரம்பித்ததிலிருந்து சமூக வலைதளங்கள், டிவி விவாத நிகழ்ச்சிகளில் தவெகவுக்கு ஆதரவாக பேசி வந்தார்.
இதனால் மதுரை மத்திய தொகுதியில் தவெக திடீர் வேட்பாளரானார். இந்நிலையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக வேட்பாளர் திரைப்பட இயக்குநர் சுந்தர்.சி ஆகியோரை எதி்ர்த்து போட்டி யிட்டு தற்போது வெற்றி பெற்றுள்ளார்.