ஆட்சியில் பங்கு கேட்கும் விவகாரத்தில் இத்தனை நாளும் பூசி மெழுகிக் கொண்டிருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை “அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது காங்கிரஸ் தொண்டனின் விருப்பம்” என பேச ஆரம்பித் திருக்கும் நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான சுதர்சன நாச்சியப்பனிடம் ‘ஜனநாயகத் திருவிழா'வுக்காக பேசினோம்.
அதிக தொகுதிகள் இல்லாவிட்டாலும் அதிகாரப் பகிர்வுக்காவது இம்முறை திமுக-விடம் உத்தரவாதம் வாங்குவீர்களா?
அதிகாரப் பகிர்வை கேட்கக்கூடிய நேரம் இல்லை இது. மத அடிப்படையில் பிரிவினையை உண்டாக்கும் பாஜக-வை தமிழகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற ஒன்றைத்தான் காங்கிரஸ் கட்சி குறிக்கோளாக கொண்டிருக்கிறது. எங்களுக்கும் அதிகாரம் வேண்டும் என விரும்பிய காலமும் உண்டு. 1981-ல் திமுக-வும் காங்கிரஸும் சரிபாதி தொகுதிகளில் போட்டியிட்டன. அப்போது எங்கள் கூட்டணி வென்றிருந்தால் அதிகாரத்தில் பங்கெடுத்து இருப்போம். ஆனால், அப்போது அதிமுகவென்றதால் அந்த வாய்ப்பை இழந்து விட்டோம். இப்போது போர் நடக்கும் காலத்தில் அதிகாரத்தில் பங்கு கேட்பது தவறு.
பாஜக-வை சமாளிக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் சுயத்தை இழக்கிறதா காங்கிரஸ்?
திமுக என்கிற வலுவான நண்பன் கிடைத்திருப்பதால் காங்கிரஸ் கட்சியின் சுயத்தன்மை வலுப்பெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் மூலம் முன்னைவிட அதிகமாக காங்கிரஸ் வேரூன்றி இருக்கிறது என்பது தான் உண்மை.
1996-ல் ரஜினியை வைத்து தமிழக காங்கிரஸ் இரண்டாக உடைந்தது போல் இப்போது விஜய்யை வைத்து மீண்டும் ஒரு பிளவு வரலாம் என்கிறார்களே..?
அப்போது திமுக - தமாகா கூட்டணிக்காக ரஜினி எந்த இடத்திலும் பிரச்சாரம் செய்யவில்லை. அவர் ஜெயலலிதாவை மட்டும் தான் எதிர்த்தார். ஆனால், நேரடியாக அரசியலுக்கு வந்திருக்கும் விஜய், பாஜக-வின் ராஜதந்திரத்தில் விழுந்திருக்கிறார். திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கான சிறுபான்மையினர் வாக்குகளை விஜய்யை வைத்து பிரித்துவிட்டால் அந்தக் கூட்டணியின் வாக்கு வங்கி சரியும் என்று கணக்குப் போட்டு விஜய்க்கு மறைமுக ஒத்துழைப்புக் கொடுக்கிறது பாஜக.
பாஜக வலையில் இருக்கும் விஜய்யை ராகுலுக்கு நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி எதற்காகச் சந்தித்தார்?
அவர் ராகுலுக்கு நெருக்கமானவர் இல்லை. காங்கிரஸ் கட்சியில் கிட்டத்தட்ட 35 பிரிவுகள் இருக்கின்றன. அதில் ஒரு பிரிவுக்கான பொறுப்பு அவரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. காரணம், அவர் ப.சிதம்பரத்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர். பிரவீனும் சிதம்பரமும் சேர்ந்து மன்மோகன் சிங் பெயரில் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதியவர்கள். இந்த அடிப்படையில் தான் பிரவீன் உள்ளே வந்தாரே தவிர அவர் ராகுலுக்கு நெருக்கமான உள் வட்டத்தில் எல்லாம் இல்லை. ஒரு காங்கிரஸ்காரராக அவர் விஜய்யை சந்தித்திருந்தாலும், “இட்லி, தோசை சாப்பிடத்தான் வந்தேன்” என்று தானே சொல்லி இருக்கிறார். அப்படி இல்லாமல், “அரசியல் கூட்டணி குறித்து பேசவந்தேன்” என்று அவர் சொல்லி இருந்தால் இந்நேரம் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்.
விஜய்யுடன் கூட்டணி வைக்கலாம் என்ற எண்ணம் காங்கிரஸுக்கு இருக்கிறதோ?
கிடையவே கிடையாது. தினமும் அன்புடன் எங்களோடு இணைந்து பணியாற்றும் உறவுக்காரர்களான திமுக-வை விட்டு விட்டு, இன்றைக்கு வந்த விஜய்யின் பின்னால் எங்களால் எப்படி ஓடமுடியும்? நாங்கள் என்ன சிறிய கட்சியா... 140 வருட பாரம்பரியம் கொண்ட கட்சி.
திமுக-வும் அதிமுக-வும் அதிகாரப் பகிர்வை தரமாட்டோம் என அடம்பிடிக்க என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?
1967-ல் ஆரம்பித்த கதை இது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 41.3 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஆனால், 40 சதவீத வாக்குகளைப் பெற்ற திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தது. காங்கிரஸை அகற்றவேண்டும் என்பதற்காக திமுக-வை ஆதரிக்க வேண்டும் என்று ராஜாஜி எடுத்த நிலைப்பாடு தான் அதற்குக் காரணம். அன்றைக்கு ஆரம்பித்தது ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது. அதை எப்படி உடனே மாற்ற முடியும்?
ப.சிதம்பரம், சசி தரூர் போன்றவர்கள் காங்கிரஸுக்கு விரோதமான கருத்துகளை தொடர்ச்சியாக பேசி வருகிறார்களே... இதை யாரும் கேட்க மாட்டீர்களா?
காங்கிரஸ் ரொம்பவே சுதந்திரமான கட்சி. இவர்கள் இருவருமே சீனியர்கள். இவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இல்லாமல் இப்படி எல்லாம் பேசுகிறார்கள். அதனால் தான், “ஒருசிலர் லட்சுமண ரேகையை மீறுகிறீர்கள்” என்று ராகுல் காந்தி குட்டிக்காட்டி இருக்கிறார். சசி தரூரோ, சிதம்பரமோ அவர்களுக்கு சில பிரச்சினைகள் வரும் போது இப்படிப் பேசுகிறார்கள்.
லாலு பிரசாத் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டார்கள் என்றதுமே தனது மகன் மீதான வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கலாகி விடுமோ என்ற அச்சத்தில், பொற்கோயில் விஷயத்தில் இந்திரா காந்தி எடுத்த நடவடிக்கையை விமர்சிக்கிறார் சிதம்பரம். மடியில் கனமிருப்பவர்கள் தான் சில நேரங்களில் இப்படி பேசுகிறார்கள். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் போகும் போது தலைமை கட்டாயம் நடவடிக்கை எடுக்கும்.
25 எம்எல்ஏ சீட், 9 எம்பி சீட் என சுருங்கிவிட்டால் எப்படி காமராஜர் ஆட்சியை அமைப்பீர்கள்?
காமராஜர் ஆட்சி என்பது தொல்காப்பியம் மாதிரியான ஓர் இலக்கணம். அவரைப் போல் 9 மந்திரிகளை வைத்துக் கொண்டு இன்றைக்கு ஆட்சி நடத்த முடியுமா? அதனால் காமராஜர் ஆட்சியோடு எல்லாம் ஒப்பிடக் கூடாது. இன்றைக்கு இருக்கின்ற காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என்றுதான் பேசவேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டுமானால் வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும்.
அதற்கான வேலைகள் தான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. பாஸ் மார்க்கே வாங்காதவனிடம் கோல்டு மெடல் வாங்குவியா என்று கேட்க முடியாது. இப்போது நாங்கள் 80 மார்க் எடுத்துவிட்டோம். மிக விரைவில் கோல்டு மெடலும் வாங்குவோம். 2029-ல் ராகுல் காந்தி பிரதமராவது நிச்சயம். அப்புறம் பாருங்கள் என்ன நடக்கிறதென்று.
பாஜக ஆட்சியில் உலக அரங்கில் இந்தியாவுக்கான மதிப்பும் மரியாதையும் உயர்ந்திருப்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்படி இருந்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளைச் செய்தன. ஆனால், இவர்கள் இங்கே மதக்கலவரத்தைத் தூண்டுகிறார்கள் என்றதும் அவர்களெல்லாம் பின்வாங்கிவிட்டார்கள். மோடியின் தலைமை இப்போது ரொம்பவே ‘வீக்’காகி இருக்கிறது.