செல்வப்பெருந்தகை | கோப்புப் படம்
சென்னை: ‘நாங்குநேரி அருகே நடைபெற்றுள்ள கொடூரமான இரட்டை கொலைச் சம்பவம் தமிழக மக்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் இதுபோன்ற குற்றச் செயல்கள் ஏற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே நடைபெற்றுள்ள கொடூரமான இரட்டை கொலைச் சம்பவம் தமிழக மக்களை மிகுந்த அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. வடமாநில தொழிலாளி உட்பட இரண்டு பேர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள இந்த சம்பவத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கடுமையாக கண்டிக்கிறேன்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் விரைவாக கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறை உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் இதுபோன்ற குற்றச் செயல்கள் ஏற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல் துறை மிகுந்த விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டுமென வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்தார்.