சென்னை: எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், தாம்பரம், கிளாம்பாக்கத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களின் சேவையில் வரும் பிப்ரவரி 20-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை 45 நாட்களுக்கு மாற்றம் செய்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாநகர் போக்குவரத்து கழகம் தற்போது ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம், கிளாம்பாக்கம் வழியாக கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் தடம் எண். இ18-ல் 16 பேருந்துகளும், கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் தடம் எண்.18ஏ-ல் 28 பேருந்துகள் என 44 பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிப்.20 முதல் ஏப்.5ம் தேதி வரை ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து 35 பேருந்துகள் கிளாம்பாக்கம் வரையும், பல்லாவரத்திலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை 15 பேருந்துகள் என மொத்தம் 50 பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.
மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கவும் மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.