தமிழகம்

கலைஞர் கனவு இல்லத் திட்டம்: 450 பேருக்கு மானியத் தொகை விடுவிக்கப்படுமா? - தூத்துக்குடி நிலவரம்

சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் மானியத் தொகை விடுவிக்கப்படாததால், பயனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் கடந்த ஆட்சியில், வீடு இல்லாத ஏழை குடும்பங்களை கண்டறிந்து, கடந்த 2021-ம் ஆண்டு முதல், மத்திய அரசின் அடல்ஜி யோஜனா திட்டம் மற்றும் மாநில அரசின் கலைஞர் கனவு இல்லம் வீடு கட்டும் திட்டம் மூலம் வீடுகட்ட மானியம் வழங்கப்பட்டது. சுமார் 300 சதுர அடி கொண்ட கான்கிரீட் வீடு கட்ட, சுமார் ரூ.3.50 லட்சம் அரசு மானியமாக வழங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் 2025- 26-ம் ஆண்டில், கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கு, 325 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது. இதில், கட்டி முடிக்கப்பட்ட 164 வீடுகளுக்கு மானியத் தொகை முழுவதும் விடுவிக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள சுமார் 161 பயனாளிகளுக்கு  சிமென்ட் மற்றும் கம்பி மட்டுமே அரசு கொடுத்துள்ளது. மீதமுள்ள மானியத் தொகையை இதுவரை விடுவிக்கவில்லை.

இந்நிலையில், 300 சதுர அடி கொண்ட வீடு கட்டுவதற்கு தற்போதைய சந்தை மதிப்பில் சுமார் ரூ.9 லட்சம் வரை செலவு ஏற்படுகிறது. இதனால், சொந்தமாக கடன் வாங்கி, இவர்கள் வீடு கட்டி விட்டனர். ஆனால் வீடு கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் அரசு மானியத் தொகை விடுவிக்கப்படாததால் பயனாளிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

இந்தாண்டு புதிதாக சுமார் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு வீடுகட்ட பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மாவட்டத்தில் கடந்த 2025- 26-ம் ஆண்டு சுமார் 450 கலைஞர் கனவு இல்ல பயனாளிகளுக்கு மானியத் தொகை இதுவரை விடுவிக்கப்படவில்லை.

“புதிய வீட்டில் குடியேற வேண்டும் கனவில் அக்கம்பக்கத்தாரிடம் கடன் பெற்று வீடு கட்டி முடித்து மகிழ்ச்சியாக குடியேற முடியாமல் நாங்கள் தவித்து வருகிறோம். எனவே காலம் தாழ்த்தாமல் கலைஞர் கனவு இல்லம் பயனளிகளுக்கு மானியத்தொகையை விடுவிக்க வேண்டும்” என பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT