கொடைக்கானலில் கைது செய்து திண்டுக்கல்லுக்கு அழைத்து வரப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன்.
திண்டுக்கல்: பழநி கோயில் நில மோசடி வழக்கில் தொடர்புடைய சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரப் பகுதியில் உள்ள தண்டபாணி மடத்துக்கு சொந்தமான ரூ100 கோடி மதிப்பிலான நிலம், மோசடியாக ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
11 பேர் மீது வழக்குப்பதிவு: இதுதொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மடத்தின் நிர்வாகி முருகதாஸ், நிலத்தை வாங்கிய திருப்பூர் மாவட்டம் பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, பழநி அருகே புதூரைச் சேர்ந்த சேதுபதி, பத்திரம் தயாரித்துக் கொடுத்த வழக்கறிஞர் அன்வர்தீன், இடைத்தரகராக செயல்பட்ட ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தஜெயபிரகாஷ் உட்பட 11 பேர் மீது திண்டுக்கல் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் பெற்று திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் தினமும் விசாரணைக்கு ஆஜராகி வந்தார். இந்நிலையில் அவரது முன்ஜாமீனை நேற்று முன்தினம் உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
கொடைக்கானலில் பதுங்கல்: இதையடுத்து ஜஸ்டின் மணிகண்டனை கைது செய்ய சிபிசிஐடி போலீஸார் தேடிவந்தனர். இந்நிலையில் அவர் கொடைக்கானலில் பதுக்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற சிபிசிஐடி போலீஸார் தலைமறைவாக இருந்த ஐஸ்டின் மணிகண்டனை கைது செய்து நேற்று மாலை திண்டுக்கல் அழைத்துவந்தனர்.
திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடத்திய போலீஸார், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய இடைத்தரகர் ஜெயப்பிரகாஷ் வெளிமாநிலத்தில் தலைமறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அவரது இருப்பிடம் குறித்து போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஜெயப்பிரகாஷ் வீட்டில் நேற்று சிபிசிஐடி போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அவரது மனைவி செண்பகமதியிடம், கணவரிடம் இருப்பிடம் குறித்து விசாரணை நடத்தினர்.