சென்னை: “பல லட்சம் இந்தியர்களின் வாக்களிக்கும் உரிமையைத் திருடிய குற்றம் தேசத் துரோகத்துக்கு நிகரானது. இந்தக் குற்றத்துக்காக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகக் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான ஆன்லைன் படிவம் 6-ல் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் சட்டவிரோதம் என இரண்டு தேர்தல் ஆணையர்களும் பதிவு செய்துள்ளனர். அதையும் மீறிதான் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் படிவம் 6-ஐ திருத்தியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து செப்டம்பர் 26-ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தில் படிவம் 6-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை உச்ச நீதிமன்றம் தனது முந்தைய உத்தரவுகளில் ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.
ஆனால், இன்று நடந்த வழக்கு விசாரணையில் படிவம் 6-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு நாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவெ பல்வேறு தளங்களில் அம்பலப்பட்ட ஞானேஷ் குமார் இன்று உச்ச நீதிமன்றத்திலும் அம்பலப்பட்டுள்ளார்.
பல லட்சம் இந்தியர்களின் வாக்களிக்கும் உரிமையைத் திருடிய இந்தக் குற்றம் தேசத்துரோகத்துக்கு நிகரானது. இந்தக் குற்றத்துக்காக அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.