தமிழகம்

பெரம்பலூர்: அரசுக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

எஸ்.ஸ்டாலின்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் உள்ள அரசுக் கல்லூரியில் விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி) செயல்பட்டு வருகிறது. குரும்பலூரில் செயல்பட்டு வரும் இந்தக் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள், பகுதி நேர விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்கள் என 38 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு  விரிவுரையாளர்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். விடுபட்ட பாடப்பிரிவுகளுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்டு 28-ம் தேதி கல்லூரி நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் ஆகஸ்டு 31-ம் தேதி உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்து இருந்தனர்.

அதன்படி ஆகஸ்ட் 31-ம் தேதி பணியை புறக்கணித்து அனைவரும் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். ஆனால் இவர்களின் போராட்டத்திற்கு அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள், தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் இன்று 4-வது நாளாக நடந்த உள்ளிருப்பு போராட்டத்துக்கு மாணவ, மாணவிகளும் ஆதரவு தெரிவித்தனர். அதன்படி 250 மாணவ, மாணவிகள், விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விரிவுரையாளர்கள் கூறுகையில், ‘‘குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 38 பேர் பணியாற்றி வருகிறோம்.

எங்களுக்கு கடந்த 3 மாதங்களாக சரியாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஒரே ஊதியம் வழங்கப்படவில்லை. நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும். விடுப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறோம்.

மாணவ, மாணவிகளும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் எங்கள் பணிகள் மட்டுமின்றி மாணவ, மாணவிகளின் படிப்பும் பாதிக்கப்படுகிறது. இது தொடர்பாக பலக்கட்ட பேச்சு வார்த்தை நடந்தும், அவை தோல்வியில் முடிந்துள்ளது.

எனவே மாநில அரசு மெத்தன போக்குடன் செயல்படாமல், எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுக்க வேண்டு. இல்லையென்றால் எங்கள் உள்ளிருப்பு போராட்டம் தொடரும்’’ என்று தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT