உயிரிழந்த மாணவர் விஷ்ணு
கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த விஷ்ணு என்ற மாணவர், பள்ளியின் பின்புறம் உள்ள மதிற்சுவரை ஏறி குதித்தபோது காயமடைந்து உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் திருப்பாணாழ்வார் தெருவைச் சேர்ந்தவர் ராஜன் மகன் விஷ்ணு (14). இவர் அங்குள்ள த.வீ.செ.அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். கபடி வீரரான இவர் கடந்த 7ம் தேதி மாலை 4.30 மணிக்கு பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்பை புறக்கணித்து விட்டு பள்ளியின் பின்புறம் உள்ள மதிற்சுவரை ஏறி குதித்தபோது காயமடைந்தார்.
உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் மாணவர் விஷ்ணு சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஜிப்மர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இரவு விஷ்ணுவின் உடல் ஸ்ரீமுஷ்ணத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது விஷ்ணுவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக்கூறி, அவரது உறவினர்கள் சிதம்பரம் சாலையில் மறியல் செய்ய திரண்டனர்.
சேத்தியாதோப்பு டிஎஸ்பி செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் செல்வகுமார் அவர்களை சமாதானம் செய்து கலைந்து போகச்செய்தனர். தொடர்ந்து இன்று மாலை மாணவனின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதால் அப்பகுதியில் மேலும் பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விஷ்ணுவின் தந்தை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தாய் கவிதா கூலித்தொழிலாளி. விஷ்ணுவோடு மற்றொரு மாணவரும் பள்ளி சுவர் ஏறிக்குதித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.