சென்னை: பணியின் போது அரசு பேருந்து ஓட்டுநர்கள் கைப்பேசியை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்து துறை வெளியிட்ட சுற்றறிக்கை: பேருந்து இயக்கத்தின் போது ஓட்டுநர்கள் கைப்பேசி (செல்போன்) பயன்படுத்தக் கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஓட்டுநர்கள் சட்டப்பையில் கைப்பேசி வைத்திருப்பதாகவும், அவ்வப்போது பணியின் போது பயன்படுத்தி வருவதாக பயணிகளிடம் இருந்து புகார் வருகிறது.
இவ்வாறு ஓட்டுநர்கள், பணியின் போது கைப்பேசியை பயன்படுத்தி வருவதால், அவ்வப்போது உயிரிழப்பு மற்றும் பெரிய விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
எனவே,ஓட்டுநர்கள் பணியில் இருக்கும் போது கைப்பேசி, ப்ளூ-டூத் ஹெட்-செட் போன்ற சாதனங்களை கண்டிப்பாக எடுத்துச் செல்லக்கூடாது.
பணி தொடங்குவதற்கு முன்பு நடத்துநரிடம் ஒப்படைத்துவிட்டு, பணி முடிந்த பின் அவர்களிடம் இருந்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், ஆய்வின் போது ஓட்டுநர்கள் கைப்பேசி பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ஓட்டுநர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா என பரிசோதகர்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள், மேலாளர்கள் கள ஆய்வின் போது உறுதி செய்ய வேண்டும்.