தமிழகம்

‘‘சென்னை பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ உடன் இணைக்க நடவடிக்கை’’ - அஸ்வினி வைஷ்ணவ்

மோகன் கணபதி

சென்னை: சென்னையில் பறக்கும் ரயில் போக்குவரத்து சேவையை, மெட்ரோ ரயில் சேவையுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் திமுக எம்பி வில்சன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள அஸ்வினை வைஷ்ணவ், ‘‘சென்னையில் பறக்கும் ரயில் போக்குவரத்து சேவையை, மெட்ரோ ரயில் சேவையுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

          

பறக்கும் ரயில் போக்குவரத்து சேவையின் சொத்துகள், பராமரிப்பு மற்றும் செயல்பாடுகளை தமிழக அரசிடம் ஒப்படைப்பதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு மற்றும் ரயில்வே அமைச்சகம் இடையே விரிவான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. தற்போது ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அத்திப்பட்டு – கும்மிடிபூண்டி இடையே 22.52 கிமீ நீளத்திற்கு 3-வது மற்றும் 4-வது வழித்தடம் அமைப்பற்கான ஒப்புதல் அண்மையில் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அண்மை ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல்வேறு ரயில்வே திட்டங்களை செயல்படுத்துவதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பணிகளுக்காக 2009 முதல் 2014-ம் ஆண்டுகளில் ரூ. 879 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதேநேரத்தில், 2025-26-ம் ஆண்டில் மட்டும் ரூ. 6,626 கோடி (ஏழரை மடங்கு கூடுதலாக) பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

01.04.2025 அன்று நிலவரப்படி தமிழகத்தில் 9 புதிய வழித்தடங்கள், 3 அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டங்கள், 3 இரட்டை வழிப்பாதை அமைத்தல் என 1,700 கிமீ நீளத்திற்கு ரூ.22,808 கோடி அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT