சென்னை: தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையமான வரலாற்றுச் சிறப்புமிக்க ராயபுரம் ரயில் நிலையத்தில் ‘ஸ்டேஷன் மஹோத்சவ்’ கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
இந்திய ரயில்வேயில் வரலாற்றுச் சிறப்புமிக்க, பழமையான மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ரயில் நிலையங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் பெருமையையும் பாரம்பரியத்தையும் மக்களுக்கும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக, ‘ஸ்டேஷன் மஹோத்சவ்’ (ரயில் நிலைய பெருவிழா) மத்திய அரசால் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையமான வரலாற்றுச் சிறப்புமிக்க ராயபுரம் ரயில் நிலையத்தில் ‘ஸ்டேஷன் மஹோத்சவ்’ புதன்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 1856-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி திறக்கப்பட்டு, 170 ஆண்டுகாலப் பெருமைமிக்க பாரம்பரியம் கொண்ட இந்த ரயில் நிலையத்தின் முக்கியத்துவத்தைப் போற்றும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, உலகின் பழமையான இயங்கும் நீராவி இன்ஜின் என்ற கின்னஸ் சாதனை படைத்த "இஐஆர் -22" நீராவி இயந்திரம் சென்னை எழும்பூரிலிருந்து ராயபுரம் வரை இயக்கப்பட்டது. இதை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் யு.சுப்பா ராவ், கூடுதல் பொதுமேலாளர் விபின்குமார், சென்னை கோட்ட மேலாளர் சைலேந்திரசிங் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
ரயில்வே ஊழியர்கள் மற்றும் பெரம்பூர் ரயில்வே பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், ராயபுரம் ரயில் நிலையத்தின் வரலாறு குறித்த சிறப்பு ஆவணப்படத் திரையிடலும் நடைபெற்றன.
பாரம்பரிய கட்டிடத்துக்குள் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் 100 ஆண்டுகளுக்கும் பழமையான எட்மண்ட்சன் டிக்கெட் அச்சு இயந்திரம், பழங்கால எடையிடும் தராசு, ஸ்டேஷன் மாஸ்டர் மேஜை, லெவல் கிராசிங் சாவிகள், பழங்கால விளக்குகள் மற்றும் நாணயப் பைகள் ஆகியவை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இளைய தலைமுறையினருக்கு இந்திய ரயில்வேயின் மகத்தான வரலாற்றைக் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த மறக்க முடியாத கொண்டாட்டம் அமைந்தது.