அமைச்சர் நிர்மல் குமார்

 
தமிழகம்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்ய ஆலோசனை: அமைச்சர் நிர்மல் குமார் தகவல்

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று மாவட்ட அளவிலான வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் பங்கேற்க வந்த அமைச்சர் நிர்மல் குமார், ‘‘ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு, திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசின் நிலைப்பாடு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாகக் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும்’’ என்று கூறினார்.

அதனால், அனைத்து செய்தியாளர்களும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைச்சரின் சந்திப்புக்காகத் திரண்டனர். ஆனால், திடீரென செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு குழப்பமாக இருப்பதால் செய்தியாளர்களைச் சந்திக்க அமைச்சர் நிர்மல் குமார் தயங்கியதாகவும், மேலிட ஆலோசனையின்படியே செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும், கூட்ட அரங்குக்கு வெளியே காத்திருந்த செய்தியாளர்களைத் தவிர்ப்பதற்காக, வேறு வழியாக அமைச்சர் நிர்மல் குமார் வேகமாகச் சென்றார். ஆனாலும், அவரைப் பின்தொடர்ந்து சென்ற செய்தியாளர்கள், திருப்பரங்குன்றம் வழக்கு தொடர்பாகப் பல்வேறு கேள்விகளை அடுத்தடுத்து எழுப்பினர்.

அதற்கு அமைச்சர் நிர்மல்குமார், ‘‘திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றும் வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறோம். இதுதொடர்பாக நாளை (இன்று) காலை தெரிவிப்போம்’’ என்று கூறிவிட்டு சென்றார்.

பக்தர்களுக்கு கட்டுப்பாடு

திருப்பரங்குன்றம் கோயில் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் அத்துமீறி யாரும் நுழைந்துவிடாமல் இருக்க போலீஸார் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் மற்ற மத அமைப்புகளின் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதை உட்பட மலையைச் சுற்றிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மலைப்பகுதி முழுவதையும் ட்ரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர். வெளியாட்கள் நடமாட்டத்தையும் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். கோயில் மற்றும் மலைப் பகுதியில் இருந்து குறிப்பிட்ட தூரம் வரை ஆர்ப்பாட்டம், ஊர்வலங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் தீபத் திருவிழாவை வெகு விமரிசையாகக் கொண்டாட இந்து அமைப்புகள் தயாராகி வருகின்றன. மலைக்கு மேல் யாரையும் அனுமதிக்க மாட்டார்கள் என்றாலும், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை திருப்பரங்குன்றம் மக்கள் தரிசனம் செய்யும் வகையில், திருப்பரங்குன்றத்தில் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் அகன்ற திரையை அமைத்து நேரடி ஒளிபரப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு இந்து அமைப்புகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

தீப தரிசனத்துக்காக இந்துக்கள் வரும் 24-ம் தேதி திருப்பரங்குன்றத்துக்கு வரும்படி இந்து அமைப்புகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT