தமிழகம்

நிர்வாக செலவுகள் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்: டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ‘கடை வாடகை, உடையும் பாட்டில்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட நிர்வாகச் செலவுகள் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்’ என டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொழிற்சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று மதுவிலக்குத் துறை அமைச்சர் ஊதிய உயர்வு வழங்கியதை வரவேற்கிறோம். அதேசமயம் காலமுறை ஊதியம், ஓய்வூதியம், ஓய்வு வயது 60 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும். மேலும் நிர்வாகச் செலவுகள் முழுவதையும் அரசே ஏற்கும் என்று கூறியதில் காலி பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்துவதற்கான செலவுகளை வழங்க மறுத்து வருகிறது.

மின் கட்டணம் மட்டுமே நிர்வாகம் செலுத்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கடை வாடகை சம்பந்தமாக கட்டிட உரிமையாளர்களிடம் பேசி இறுதி முடிவு எடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் மதுபான பெட்டிகளை கடைகளில் இறக்குவதற்கான முழு செலவுகளையும் நிர்வாகம் ஏற்க வழங்கிய உத்தரவு பல மாவட்டங்களில் அமல்படுத்தவில்லை. உடையும் பாட்டில்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை இல்லை.

நீதிமன்ற உத்தரவுப்படி வாடிக்கையாளர்களுக்கு மதுபான பாட்டில்களை விற்பனை செய்யும்போது பில் வழங்க தேவையான பேரிகேட் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவில்லை. இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல மாவட்டங்களில் தன்னெழுச்சியாக காத்திருப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், புதிதாக பணியாளர்களைத் தேர்வு செய்து உங்களை பணிநீக்கம் செய்து விடுவோம். நிர்வாகச் செலவுகளை நீங்கள்தான் ஏற்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை மாவட்ட மேலாளர்கள் மிரட்டி வருகின்றனர். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமானால், அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT