தமிழகம்

மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி: சென்னை பெண்கள் அணிக்கு சாம்பியன் பட்டம்

இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகர் அருகே ஆமத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் சென்னை பெண்கள் அணி 12 தங்கப் பதங்கள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பில் 42வது மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் ஆமத்தூர் ஏஏஏ பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டிக்கு தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் மாநிலச் செயலாளர் விஜய் பாபு முன்னிலை வகித்தார். செல்வம் எம்எல்ஏ, தொழிலதிபர்கள் பாலசுப்பிரமணியன், ஜவகர், ஏஏஏ பொறியியல் கல்லூரி செயலாளர் விக்னேஷ்குமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

விருதுநகர் மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் ஜாகீர் உசேன், தமிழ்நாடு சிலம்பாட்ட கழக பொருளாளர் ஹரிபாஸ்கரன், விருதுநகர் மாவட்ட சிலம்பாட்ட கழக பொருளாளர் பூபாலகணபதி உள்ளிட்டோர் போட்டிகளை வழிநடத்தினர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1,200க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், சென்னை மாவட்ட பெண்கள் அணி 21 தங்கப் பதக்கங்களைப் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 2ம் இடத்தை 11 தங்கப் பதக்கங்கள் பெற்ற திருவள்ளூர் மாவட்டம் பெற்றுள்ளது.

இப்போட்டி குறித்து தமிழ்நாடு சிலம்பாட்ட கழகச் செயலாளர் விஜய் பாபு கூறுகையில், "விளையாட்டை ஊக்குவிக்க தமிழக முதல்வரும், விளையாட்டுத் துறை அமைச்சரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். அதேவேளையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தமிழ்நாடு சிலம்பாட்ட கழக்கத்தை விரைவில் அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசுக்கு வைக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT