தமிழகம்

நாட்டில் நடக்கும் அக்கிரமங்களைத் தடுக்க நடவடிக்கை எடுங்கள்: முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: நாட்டில் அக்கிரமங்கள் நடக்கின்றன. அதுபற்றி வரும் செய்திகளை எல்லாம் முதல்வர் விஜய் படித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற திருமண விழா ஒன்றில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஒரு மாநிலக் கட்சி எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நம்முடைய திமுக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு தேர்தல் தோல்விக்கே இன்றைக்கு பல கட்சிகள் காணாமல் போயுள்ளன.

ஆனால் 75 ஆண்டுகள் தொடர்ந்து கொள்கைக்காக லட்சியத்துக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் கட்சி, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்களுக்காகப் பாடுபடும் கட்சி திமுக மட்டும்தான்.

அதேபோல், இன்றைக்கு சமூக ஊடகங்கள் எந்தளவுக்கு பரவிக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். ஆனால், அதெல்லாம் ஒரு காலக்கட்டம் வரைதான்.

நாளடைவில் அவை மறைந்து போகத்தான் போகிறது. இன்றைக்கு சோசியல் மீடியாவை பார்க்கிறபோது, ‘கோட்போட்டு வந்தார், கையில் டிபன் கேரியர் எடுத்து வந்தார், வாட்ச்கட்டி வந்தார், செஸ் விளையாடினார் போன்றவை செய்திகளாக வந்து கொண்டிருந்தன.

தற்போது அவைகள் எல்லாம் மறைந்து, நாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் முதல்வரை பார்த்து நான் கேட்பதெல்லாம், தயவுசெய்து இன்றைக்கு உங்கள் ஆட்சியை பற்றி வரும் செய்திகளை படித்து அதிலுள்ள உண்மையை கண்டுபிடிங்கள்.

அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘‘தற்போது எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அந்த கட்சியின் கரைவேட்டிகளை கட்டி சுற்றுபவர் களை அதிகம் பார்த்து வருகிறோம்.

தவெகவின் சோபா மாடல் ஆட்சிக்கு வந்ததும் இன்னும் அதிகமாக அதை பார்க்க முடிகிறது. அடுத்தகட்சி எம்எல்ஏக்களை இந்த அரசு கொள்முதல் செய்துவருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தபோது திமுகவுக்கு வாக்களிக்க தவறிவிட்டோம் என வாக்களிக்காத மக்கள் வருத்தப்பட்டனர்.

ஆனால், தவெக ஆட்சிக்கு வந்தபின் மோசமான ஒரு ஆட்சிக்கு வாக்களித்துவிட்டோமே என மக்கள் வருத்தப்படுகிறார் கள். சோபா மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை’’ என்றார்.

ஓபிஎஸ் நெகிழ்ச்சி

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசும்போது, ‘‘இந்த மண்டபத்தில்தான் அதிமுக பொதுக்குழு நடைபெற்றபோது தண்ணீர் பாட்டிலைக் கொண்டு வீசி என்னை வெளியேற்றினர். அன்று என் சிரிப்பே தொலைந்துபோனது.

அதே மண்டபத்தில் என் சிரிப்பை இன்று மீட்டு தந்தவர் மு.க.ஸ்டாலின். எங்கிருந்து என் அரசியலைத் தொடங்கினேனோ, இன்று அதே இடத்துக்கே வந்திருப்பது மனநிம் மதியாக இருக்கிறது’’என்றார்.

திமுக எம்.பி கனிமொழி பேசும்போது, ‘‘தற்போது சில அரசியல்வாதிகள் வாய் திறந்து பேசுவதில்லை. எதற்கும் பேசுவதில்லை, பதில்கூறாமல் மவுனமாக இருக்கின்றனர். அவர்கள் எப்போது பேசுவார்கள் என காத்திருக்கக்கூடிய சூழல் உள்ளது’’ என்றார்.

SCROLL FOR NEXT