அவசரடியாய் நடத்தப்படும் எஸ்ஐஆரை எதிர்க்கிறோம் எனச் சொல்லிக் கொண்டே இருந்தாலும் மற்ற கட்சிகளை விட திமுக தான் எஸ்ஐஆர் பணிகளில் சுறுசுறுப்புடன் களத்தில் நிற்கிறது. இந்த விஷயத்தில் நிர்வாகிகள் சோர்ந்தாலும் தலைவர் ஸ்டாலின் விடுவதாய் இல்லை. இரவு நேரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக குத்து மதிப்பாக ஏதாவது ஒரு ஊரில் இருக்கும் கட்சி நிர்வாகிக்கு போன் போட்டு, “எஸ்ஐஆர் பணிகள் எப்படிப் போயிட்டு இருக்கு” என்று கேட்பதுதான் ஸ்டாலினின் லேட்டஸ்ட் மூவ்.
அரசு விழாவோ கட்சி நிகழ்ச்சியோ எதுவாக இருந்தாலும் தங்கள் ஊருக்கு தலைவர் வரும்போது தூரமாய் நின்று கைகாட்டி சந்தோஷப்பட்டுப் கொள்ளும் கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள், தற்போது தலைவரே தங்களுக்குபோன் போட்டு எஸ்ஐஆர் பணிகள் குறித்து விசாரிப்பதால் திக்குமுக்காடிப் போய்க்கிடக்கிறார்கள்.
மதுரை நரிமேடு பகுதி திமுக செயலாளர் சரவணன். இவர் எஸ்ஐஆர் பணிகளை முடித்துவிட்டு பைக்கில் இரவு 8.30 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, புதிதாக ஒரு எண்ணில் இருந்து போன். மறுமுனையில் பேசிய நபர், “நரிமேடு பகுதி கழகச் செயலாளர் சரவணனா?” என்று கேட்க, சரவணன் தயக்கத்துடன், “ஆமா... என்ன விஷயம்?” என்று கேட்டிருக்கிறார்.
“கொஞ்சம் இருங்க... தலைவர் பேசுறாங்க” என்று மறுமுனை குரல் சொல்ல, பதறிப் போயிருக்கிறார் சரவணன். மறுமுனையிலிருந்து பேசிய ஸ்டாலின், ‘‘வாழ்த்துகள் சரவணன்... சின்ன வயசுல பகுதி கழகச் செயலாளரா ஆகிருக்கீங்க; சிறப்பா செயல்படுறீங்க... நிறைய நலத்திட்ட உதவி முகாம்கள நடத்துறீங்க... வாழ்த்துகள்’’ என்று சொல்லிவிட்டு சுமார் 2 நிமிடங்கள் மற்ற விஷயங்கள் குறித்தும் விசாரித்துள்ளார்.
இந்த விஷயத்தை நம்மிடம் சொன்ன சரவணன், ‘‘தலைவருக்குப் பக்கத்துல நாலஞ்சு பேருல ஒருத்தனா நின்னுருக்கேன். முதல் முறையா தலைவரே எனக்குப் போன் போட்டுப் பேசியதும் எனக்கு கையும் ஓடல காலும் நிக்கல. பதற்றமாவே இருந்துச்சு.
‘உங்களோட செயல்பாடுகள் அனைத்தையும் கவனிச்சுட்டு வர்றேன்’ன்னு சொன்ன தலைவர், என்னோட 3 வார்டுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி விவரங்களையும், அங்க நடக்கிற எஸ்ஐஆர் பணி விவரங்களையும் மிகத் துல்லியமா சொன்னார். 10 ஆயிரம் பேர் திருத்தப் பட்டியல்ல ஏற்றப்பட்டதா சொன்னேன். அதையும் திருத்துன அவரு, ‘8,237 பேர் தான் விண்ணப்பிச்சிருக்காங்க’ன்னு சொன்னார்.
‘சர்வர் பிரச்சினை. நாளைக்குள்ள 10 ஆயிரம் பேரையும் ஏத்திருவாங்க’ன்னு சொன்னேன். எல்லா பணிகளையும் சீக்கிரமா முடிச்சுருவோம் தலைவரேன்னு சொன்னேன். தலைவரே எனக்கு போன் போட்டுப் பேசுனத இன்னமும் நம்ப முடியாமத்தான் இருக்கேன்” என்றார்.