சென்னை அண்ணா அறிவாலயத்தில் 41-வது நாளாக நேற்று நடைபெற்ற ‘உடன்பிறப்பே வா’ நிகழ்வில் ஓட்டப்பிடாரம், ஆலங்குளம், கன்னியாகுமரி தொகுதிகளின் நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.
அப்போது, ஆலங்குளம் தொகுதி சார்பில் பங்கேற்ற தெற்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார், ‘‘எங்க அப்பா முத்துவேல் 1967-ல் இருந்து திமுக உறுப்பினர். இப்பவும் டீக்கடையில் உட்கார்ந்து அரசியல் பேசிட்டு இருக்காரு. உங்ககூட போட்டோ எடுக்க கூட்டிட்டு வரவா?’’ என கேட்டார்.
அதற்கு முதல்வர் ஸ்டாலின், ‘‘அப்பாவுக்கு போன் பண்ணுங்க, நானே பேசி வரச் சொல்லுறேன்’’ என கூறியதுடன், அவரது தந்தையுடனும் போனில் பேசினார். இதைக் கண்டு ‘இதுபோதும் தலைவரே’ என ஆனந்த கண்ணீரில் சிவகுமார் நெகிழ்ந்துவிட்டார்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் நடைபெற்ற ‘உடன்பிறப்பே வா’ சந்திப்பில் கோவை தெற்கு மாவட்டம் சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் பி.வி.மகாலிங்கம், அதிமுகவினருடன் தொடர்பில் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் விசாரணையின் முடிவில் மகாலிங்கம் பதவி பறிக்கப்பட்டு, அந்த இடத்துக்கு தற்போது புதிதாக ஆர்.ரமேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.