திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாட்டில், முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியல் சட்டப் புத்தகத்தை நினைவுப் பரிசாக வழங்கிய திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., உடன் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் கே.என்.நேரு, எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன்
நூறு நாள் வேலைத் திட்டத்தை முடக்கி பெண்களின் முன்னேற்றத்துக்கு விரோதமாக பாஜக அரசு செயல்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு ஒத்து ஊதும் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி, கமலாலயத்தில் எழுதிக் கொடுக்கும் அறிக்கையை, அதிமுக ‘லெட்டர் பேடில்’ வெளியிடுகிறார்” என மேற்கு மண்டல திமுக மகளிர் அணி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டையில், ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பில், திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நேற்றுநடந்தது. மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது : உங்களை பார்க்கும் போது ‘பவர் ஃபுல்லாக’ உள்ளது. ‘உமன் பவரில்’ திமுக, மீண்டும் ‘பவருக்கு’ வருவதுஉறுதியாகியுள்ளது. திராவிட இயக்கம் செய்த புரட்சியால்தான், பெண் விடுதலை, மகளிர் முன்னேற்றம். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது. உள்ளாட்சியில் பெண்களுக்கு கிடைத்த அதிகாரம், நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் கிடைக்க வேண்டும் என்பது தான் திமுகவின் லட்சியம்.
தேவையே இல்லாத நிபந்தனைகளோடு, பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை, மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடைப்பதை அவர்கள் விரும்பவில்லை. அதனால் பெயரளவுக்கு மசோதாவை நிறைவேற்றிவிட்டு, காலத்தை கடத்துகின்றனர். திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், நான் முதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளோம். குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். பெண் படித்தால், அந்த குடும்பத்தின் அடுத்த தலைமுறை முன்னேற்றம் அடையும். அதனால், பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து புதுமைப் பெண் திட்டம் கொண்டு வந்தோம்.
ஆனால், நாடு முழுக்க பெண்களின் வாழ்வாதாரத்துக்கு துணையாக இருந்த மகாத்மாகாந்தி 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை பாஜக அரசு இழுத்து மூடியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பயனடைந்தவர்களில் 88 சதவீதம் பேர் பெண்கள். பெண்களுக்கான வாழ்வாதார திட்டத்தை பாஜக அரசு நிறுத்தியதால், கிராமப்புற பொருளாதாரம், பணப்புழக்கம் பாதிக்கும். பாஜகவின் இந்த நடவடிக்கை பெண்களின் முன்னேற்றத்துக்கு விரோதமானதாகும். பாஜகவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்கட்சி தலைவர் பழனிசாமி ஒத்து ஊதுகிறார். கமலாலயத்தில் எழுதிக் கொடுக்கும் அறிக்கையை, அதிமுக ‘லெட்டர் பேடில்’ வெளியிடுகிறார்.
திராவிட மாடல் ஆட்சியில், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தசாதனைகளின் தொடக்கம் மட்டுமே. அடுத்து அமையும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில், பெண்களுக்கான திட்டங்களை விரிவுபடுத்தப்போகிறோம். இதை வீடு வீடாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். பெண்களாகிய உங்களால், வீட்டுக்குள்ளும் அங்குள்ள பெண்களின் மனதுக்குள்ளும் செல்ல முடியும். உங்களிடம் உள்ள ‘எமோஷனல் கனெக்ட்டை’ பயன்படுத்தி, ஒவ்வொருவரின் வீட்டுக்குள்ளும் அரசின் திட்டங்களை கொண்டு செல்ல வேண்டும். பெண்களின் முன்னேற்றத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைத்தே தீர வேண்டும். அதற்கான பணிகளை தொடங்க வேண்டும். திராவிட மாடல் 2.0 ஆட்சி, பெண்களுக்கான ஆட்சியாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி பேசும்போது, ‘‘தமிழ்நாட்டில் 47 சதவீதம் மகளிர் வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளனர். புதிய ஸ்டார்ட் அப் தொழிலை 2ஆயிரத்து 22 பேர் துவங்கியதில், 56 சதவீதம் பேர் பெண்கள். தமிழ்நாட்டில் உயர்கல்விக்கு செல்லும் பெண்கள் 48 சதவீதமாகும்.
சங்கி கூட்டமும், அடிமை கூட்டமும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தது நம் அனைவருக்கும் தெரியும். பொள்ளாச்சியில் திமுக மகளிரணி போராட்டத்தை கையிலெடுத்தது. அதன்பிறகே பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் வழக்கு, சிபிஐ-க்கு மாறியது. அவர்களுக்கு திமுக ஆட்சியில் நியாயம் கிடைத்தது. கோவையில் சமீபத்தில் பெண்ணுக்கு எதிராக ஒரு சம்பவம் நடந்தபோது, 30 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். ஆன்மீகத்தை, மதக்கலவரத்தை, மதவெறியை, வெறுப்புணர்ச்சியை புகுத்தும் பாஜகவின் நினைப்புக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் சம்மட்டி அடி தருகிறார்’’ என்றார்.