மு.க.ஸ்டாலின்

 
தமிழகம்

“விரைவில் ஒரு நல்ல சூழ்நிலை...” - திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு

தமிழினி

சென்னை: தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கடுமையாக விமர்சித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “விரைவில் ஒரு நல்ல சூழ்நிலை அமைய இருக்கிறது. அதற்கு திமுகவினர் இப்போதே தயாராக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும், “திரையில் கதாநாயகனாக நடித்து, நிஜத்தில் ஒரு வில்லனாக உலா வந்து கொண்டிருப்பவர்தான், இன்றைக்கு தமிழகத்தின் முதல்வராக இருக்கிறார்” என்று அவர் விமர்சித்தார்.

சென்னையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ரவிச்சந்திரனின் மகன் விஷால் நாராயண் - ரிஷா பாட்டீல் ஆகியோரின் திருமண விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நேருவும், கருணாநிதியும், பிரிக்க முடியாத அளவுக்கு ஓர் உறவோடு இருந்திருக்கிறார்கள்.

அதேபோல நான் பெருமையோடு சொல்ல வேண்டும் என்று சொன்னால், என்னையும் நேருவையும் கூட யாராலும் பிரிக்க முடியாது. இன்னொன்றையும் நான் பெருமையோடு சொல்ல வேண்டும் என்று சொன்னால், கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு திமுக இருக்குமா, இந்தக் கட்சியை நிலைநிறுத்த முடியுமா என்றெல்லாம் சிலர் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், அதெல்லாம் முறியடிக்கப்பட்டு, இன்றைக்கு என்னுடைய தலைமையில் திமுக காக்கப்பட்டிருக்கிறது; கட்சி பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறது என்று பெருமையோடு சொல்கிறோம் என்று சொன்னால், அதற்குத் தனிப்பட்ட இந்த ஸ்டாலின் மட்டும் காரணம் அல்ல; இந்த ஸ்டாலினுக்குத் துணையாக இந்த நேரு போன்றவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

விரைவில் திருச்சி கிழக்கில் இடைத்தேர்தல் வரப்போகிறது. ஆறு மாத காலமாக தமிழகத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மன்னிக்கவும், ஆட்சி என்று சொல்லக் கூடாது; அது ஒரு காட்சியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. அது சும்மா வெத்து வேட்டாகத்தான், ஒரு சீன் காட்டிக் கொண்டிருப்பதை போல, ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

‘மாற்றம், மாற்றம்’ என்று சொன்னார்கள். அது தமிழக மக்களைப் பொறுத்த அளவில், மிகப் பெரிய ஏமாற்றம்தான் உருவாகி இருக்கிறது. திரையில் கதாநாயகனாக நடித்து, நிஜத்தில் ஒரு வில்லனாக உலா வந்து கொண்டிருப்பவர்தான், இன்றைக்கு தமிழகத்தின் முதல்வராக இருக்கிறார்.

எங்கு பார்த்தாலும், பாலியல் கொடுமைகள், வன்கொடுமைகள்தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அந்த வன்கொடுமைகளுக்கு ஆளாகக்கூடியவர்கள் எல்லாம் எப்படிப்பட்ட மக்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.

அந்தப் பாலியல் கொடுமைகளுக்கு எல்லாம் காரணமாக இருப்பவர்கள் யார் என்பதைப் பற்றியும் உங்களுக்குத் தெரியும். அதில் பெரும்பாலும் ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்கள்தான் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில்கூட, நீங்கள் செய்தியில் பார்த்திருக்கலாம். காரமடைப் பகுதியில் ஒன்றியச் செயலாளர் தலைமறைவாகி இருக்கிறார். இன்றைக்கு இருக்கும் தவெக கட்சியின் பெயரை மாற்றிகூட, அவர்களுக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னால், ‘பாலியல் சுரண்டல் கழகம்’ என்றுதான் பெயர் வைக்க வேண்டும் என்ற சூல்நிலைகூட உருவாகும்.

‘தூய சக்தி, தூய சக்தி’ என்று சொல்லி, இன்றைக்கு ஒரு கொடுமையான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. ஒரு மனு கொடுக்க வந்த தோழரையே, மக்கள் பிரதிநிதியையே, துணை சபாநாயகர் தாக்கி இருக்கிறார் என்ற வீடியோ காட்சிகள் எல்லாம் பார்த்தீர்கள்.

அதுமட்டுமல்ல, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஆட்சித் தலைவருக்கே என்ன நிலை ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால், இங்கு அமர்ந்திருக்கும் நம்முடைய கனிமொழிதான் அந்தச் செய்தியை முதன்முதலில் வெளிப்படுத்தி, மக்களிடத்தில் எடுத்துச் சொன்னார். அதற்குப் பிறகுதான், அது தெரிய வந்தது.

அதைப்பற்றிகூட கேட்டால், முதல்வர் வாய் திறக்க மறுக்கிறார். ஆனால் சட்டத்துறை அமைச்சர் என்ன சொல்கிறார், “அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை” என்று சொல்கிறார். ஆனால் இன்னும் சில அமைச்சர்கள் என்ன சொல்கிறார்கள், “புகார் முறையாக கொடுத்தால், நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சொல்கிறார்கள்.

இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் முடிவு கட்ட, விரைவில் ஒரு நல்ல சூழ்நிலை அமைய இருக்கிறது. அதற்கு நாம் இப்போதே தயாராக இருக்க வேண்டும்” என்று ஸ்டாலின் பேசினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT