புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்

 

படம்: எம்.சாம்ராஜ்

தமிழகம்

“டெல்லி ரிமோட் கன்ட்ரோலுக்கு எதிரான உணர்வுதான் புதுச்சேரியிலும் உள்ளது” - மு.க.ஸ்டாலின் பேச்சு

அ.முன்னடியான்

புதுச்சேரி: டெல்லியின் ரிமோட் கன்ட்ரோலுக்கு தலையாட்டும் அடிமைகள் கூட்டத்தை தமிழக மக்கள் விரும்பவில்லை. அதே உணர்வுதான் புதுச்சேரி மக்களிடமும் உள்ளது என்று புதுச்சேரியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

திமுக சார்பில் அக்கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் புதுச்சேரி கொக்கு பார்க் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட திடலில் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழகத்தின் சகோதர மாநிலமான புதுச்சேரியின் புது வளர்ச்சிக்காக உங்கள் ஆதரவை கேட்டு வந்துள்ளேன். தமிழத்துக்கும், புதுச்சேரிக்கும் எப்பவும் ஒன்றாகத்தான் தேர்தல் நடக்கும்.

ஆனால் இம்முறை மாற்றி புதுச்சேரிக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துகின்றனர். தேதியை மாற்றினால் நம்முடைய உணர்வுகளை மாற்றிவிட முடியுமா? சங்கே முழங்கு என பாடிய பாரதிதாசன் மண்ணில் நின்று புதுச்சேரியை நாசமாக்கியுள்ள சங்கி படையை விரட்டியடிக்க திமுக கூட்டணிக்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன்.

          

ஒரு வாரமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் சென்று மக்களை சந்தித்து வாக்கு கேட்டுள்ளேன். தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வு, மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய வேண்டும் என்பதையே விரும்புகின்றனர்.

டெல்லியின் ரிமோட் கன்ட்ரோலுக்கு தலையாட்டும் அடிமைகள் கூட்டத்தை தமிழக மக்கள் விரும்பவில்லை. அதே உணர்வுதான் புதுச்சேரி மக்களிடமும் உள்ளது. உங்களிடம் இருக்கா? இல்லையா? என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப நீங்கள் தயாரா?

புதுச்சேரி நிலம் புதுமையான நிலமாக மாற, 30 வேட்பாளர்களையும் ஆதரிக்க வேண்டும். சாதாரண மண்ணா இது? புகழ்பெற்ற புதுச்சேரி. இந்த மண்ணை பாஜகவும், என்.ஆர்.காங்கிரஸூம் என்ன நிலைமைக்கு கொண்டு வந்துள்ளனர்? எப்படிப்பட்ட தலைவர்களை கொடுத்த மண் இது? ஆனால், இன்றைக்கு பாஜக அரசியல் மாண்புகளை குழிதோண்டி புதைத்து கொண்டிருக்கிறது. இவர்கள் செய்யும் அட்ராசிட்டிகளால் புதுச்சேரி மண், தனது பாரம்பரிய பெருமைகளை இழந்து கொண்டிருக்கிறது.

புதுச்சேரியை அழிவிலிருந்து காக்க, வளர்க்க, நமது கூட்டணிக்கு வாக்களியுங்கள் என அன்போடும், உரிமையோடும் நான் கேட்கிறேன். அழகான புதுச்சேரியில் என்டிஏ கூட்டணியின் அலங்கோலமான ஆட்சி நடக்க நீங்கள் அனுமதிக்கலாமா? நமது டிமாண்ட் என்ன? ஒட்டுமொத்த புதுச்சேரியின் கோரிக்கை என்ன? புதுச்சேரி மாநிலமாக வேண்டும். 16 முறை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியாச்சு. ஆனால் மத்திய அரசுக்கு மனமில்லை. இல்லை என கையை விரித்துவிட்டனர். பாஜகவை பொறுத்தவரை தமிழகம் போன்ற மாநிலத்தை முனிசுபாலிட்டியாக மாற்ற நினைக்கின்றனர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்காமல், ஊராட்சி அளவுக்கு டிரீட் பண்ணுகின்றனர்.

உங்க அமைச்சருக்கு அதிகாரம் இருக்கா? சட்டப்பேரவைக்கு மாண்பு இருக்கா? உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு மரியாதையாவது இருக்கா? இங்கு ஆல் இன் ஆல் ஆளுநர். ஆளுநர் மூலமாக ரங்கசாமியை பொம்மை முதல்வராக வைத்துள்ளனர். சாமானிய மக்களையாவது வாழ விடுவார்கள்? இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு அருமையான வாய்ப்புதான் வரும் 9-ம் தேதி.

புதுச்சேரியின் புதிய விடியலுக்கான நாள் ஏப்.9. விடியலுக்கு புதுச்சேரி தயாரா? புதுச்சேரியை மட்டுமல்ல, மக்களாட்சியையும் காக்க வேண்டிய கடமை உங்கள் கையில் உள்ளது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் அரசு உங்களுக்காக செயல்படும் அரசாக இருக்க வேண்டும். டெல்லியின் கட்டளையை நிறைவேற்றும் அரசாக இருக்கவே கூடாது. இந்தி திணிப்புக்கு எதிரான மொழி போராட்டத்தில் பல தியாக திருவுள்ளங்களை கொடுத்தது புதுச்சேரி. எதிரிகள் எப்போதும் ஒரு இனத்தை வீழ்த்த, அவர்களின் மொழியை அவர்களிடமிருந்து அப்புறப்படுத்துவார்கள். தாய்மொழியை இழந்த இனங்கள் வாழ்ந்தது இல்லை என்பதே வரலாறு.

நம் தாய்மொழியையும், தமிழ் இனத்தையும் காக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். புதுச்சேரியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? ஆரம்பக் கல்வியில் சிபிஎஸ்இ கல்வி கொண்டுவந்து தாய்மொழி கல்வியை அழித்துள்ளது என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு. இப்போது சொல்லுங்கள். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழுக்கும், தமிழருக்கும் எதிரான கூட்டணிதானே? இவர்களை மறுபடியும் அனுமதிக்கலாமா?

கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது வந்த பிரதமர் மோடி, பெஸ்ட் புதுச்சேரி ஆக்குவோம் என்றார். மோசமான புதுச்சேரியாகிவிட்டது. என்,ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி மோசமாக உள்ளது. இங்கு வந்த உள்துறை அமித் ஷா டபுள் இன்ஜின் ஆட்சியால் புதுச்சேரி வளர்ச்சி அதிகமாக உள்ளதாக பேசியுள்ளார். எங்கு வளர்ந்துள்ளது புதுச்சேரி? ஒரு வேளை கடலுக்கு அந்த பக்கம் இருக்குமா? வளர்ந்த புதுச்சேரி என்றால் எனது கேள்விக்கு பதில் உள்ளதா? வில்லியனுாரில் அமைச்சருக்கு சொந்தமான குடோவுனில் பல கோடி ரூபாய் சந்தன எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. பதுக்கல்காரர்களின் புகலிடமாக புதுச்சேரியை உருவாக்கியது தான் வளர்ச்சியா?

ரெட்டியார்பாளையத்தில் விஷவாயு தாக்கி 3 பேர் இறந்தது எப்படி? அரசின் மெகா ஊழல்தான் இதற்கு காரணம். இதுகுறித்து விசாரணை நடந்ததா? இதைவிட கொடுமையாக தரமற்ற மருந்து கொள்முதல் செய்து மக்கள் உயிரோடு விளையாடியுள்ளனர்.

பல கோடி ரூபாய் போலி மருந்து தயாரித்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் சிக்கினர். ஆனால், விசாரணை முடக்கப்பட்டது. இதுதான் டபுள் இன்ஜினின் லட்சணம். புதுச்சேரியின் நீண்டநாள் கோரிக்கை மாநில தகுதி வேண்டும். அதைப்பற்றி அவர்கள் பேசவில்லை. அவர்களுக்கு தேவை என்றால் மாநிலத்தை உடைத்து புது மாநிலத்தை உருவாக்குவார்கள்.

அதுபோல புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்க முடியாதா? இவ்வளவு நடந்த பிறகும் மாநில அந்தஸ்து இல்லை என்று துரோகம் இழைத்த பிறகும், பாலாறும், தேனாறும் ஓடும்ன்னு சொல்லி அதே வாக்குறுதியை சொல்லி மக்களை ஏமாற்ற வருகிறார்கள் என்றால், புதுச்சேரி மக்களை பற்றி என்ன நினைக்கிறார்கள்? எந்த முகத்தை வைத்துக்கொண்டு பிரதமர் உங்களிடம் வாக்கு கேட்க வருகிறார்?

இப்படிப்பட்ட டப்பா இன்ஜினை மறுபடியும் கொண்டு வருவோம் என பேசலாமா? இவ்வளவு அவலங்களை புதுச்சேரி சந்திக்க பிரதமர் மோடியும், அமித் ஷாவும்தான் காரணம். முதல்வராக இருந்த 5 ஆண்டில் ரங்கசாமி, உள்ளாட்சி தேர்தலை நடத்த முயற்சித்தாரா?

ஏற்கெனவே ஆளுரை வைத்து ஊராட்சி மன்ற தலைவராக டிரீட் பண்ணுகிறார்கள் என்பதால் நடத்தாமால் விட்டாரா? என தெரியவில்லை. தனக்காக குரல் கொடுக்க முடியாதவர், எப்படி உங்களுக்காக குரல் கொடுப்பார்?

மின் துறையை தனியார்மயமாக்க துடிக்கின்றனர். கள்ளச்சாராய வியாபாரிகள் கையில் புதுச்சேரி சிக்கி சீரழிந்துள்ளது. போதைப்பொருட்களை தாராளமாக சப்ளை செய்யப்படுகிறது. சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஒப்பந்த பணி ஆசிரியர்கள் வீதிக்கு வந்து போராடுகின்றனர். இவ்வளவு பிரச்சினைகளை தீர்க்காமல், கொஞ்சமும் வெட்கமில்லாமல், பிரதமரை அழைத்து வந்து ரோடு ஷோ நடத்துகிறீர்களே? வெட்கமாக இல்லை.

தமிழகத்தில் கிடைத்த அடிமை பழனிசாமி போல புதுச்சேரியில் ரங்கசாமி உள்ளார். தனது அரசை பற்றி ரங்கசாமி கொடுத்த ஓபன் ஸ்டேட்மென்ட் என்ன தெரியுமா? கடந்த பிப்ரவரியில் சட்டப்பேரவையில் ரங்கசாமி, அதிகாரமே இல்லாத அரசு இது, தேர்தலில் போட்டியிடுவதில் அர்த்தமே இல்லை என தன் வாயால் விரக்தியடைந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாரா? இல்லையா?

இண்டியா கூட்டணியை விமர்சித்த ரங்கசாமி தனது முதுகை பார்க்கிறாரா? புதிதாக ஒரு கட்சியை கூட்டணியில் சேர்த்தால் கூட்டணியை விட்டு வெளியேறுவேன் என்றார். ஆனால் 24 மணி நேரத்தில் தனது முடிவை மாற்றிக்கொண்டார். இதுதான் அடிமை மனோபாவம். இந்த லட்சணத்தில் இண்டியா கூட்டணியை விமர்சிக்கிறார்.

தனி மனிதர்கள் வீக் ஆகி விடுவார்கள். ரங்கசாமி, பிஹார் நிதிஷ்குமாரை நினைத்து பாருங்கள். அவருக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கு வராது என என்ன நிச்சயம்? கடந்த சட்டப்பேரவை தேர்தலை நினைத்து பாருங்கள். புதுச்சேரியில் 30 எம்எல்ஏக்கள் பொறுப்பேற்கும் முன்பே 3 நியமன எம்எல்ஏக்களை மத்திய பாஜக அரசு நியமித்தது. அப்போதே கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்க நினைத்தவர்கள் அவர்கள்.

பாஜகவுக்கு தெரிந்த ரூட்டில் ரங்கசாமியை எப்போது, எப்படி கவிழ்க்கலாம் என சிந்திக்கிறது. இது ரங்கசாமிக்கும் தெரியும், அவரும் சாமானியபட்டவரா? அவருக்கு எத்தனை வருஷம் சர்வீஸ்? பதவிக்காக எப்படியெல்லாம் மாறி, மாறி போவாரு. அதனால் தான் அரசுக்கு அதிகாரம் இல்லை என்றார்.

இந்த லட்சணத்தில் மத்திய அரசுடன் கூட்டணி வைத்தால் எல்லாம் கிடைக்கும் என பிரச்சாரம் செய்கிறார். ரங்கசாமி மனதில் கை வைத்து சொல்லட்டும், நீங்கள் நினைத்ததை மத்திய அரசு செய்ததா? தலைமை செயலரைக்கூட மாற்ற முடியவில்லையே? எத்தனை கோப்புகள் ஆளுநர் மாளிகையில் துாங்குகிறது? நீங்கள் கேட்ட பட்ஜெட் தொகையை மத்திய அரசு அளித்துள்ளதா? இப்படியெல்லாம் மக்களை வஞ்சித்துவிட்டு கவர்ச்சி வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றலாம் என ரங்கசாமி நினைக்கிறார்.

பாஜக மீதுள்ள பாசத்தால் புதுச்சேரி மக்களுக்கு ரங்கசாமி துரோகம் செய்வது நியாயமா? இம்முறை புதுச்சேரி மக்கள் ஏமாற மாட்டார்கள். புதுச்சேரி மக்கள் மாற்றத்துக்கு, புதிய விடியலுக்கு தயாராகி விட்டார்கள்.

தமிழகம் போல திராவிட மாடல் முற்போக்கு திட்டங்கள் புதுச்சேரியிலும் செயல்படுத்த திமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும். ஸ்டாலின் குரல் புதுச்சேரிக்கும் சேர்த்தே எப்போதும் ஒலிக்கும். புதுச்சேரி புதிய விடியலையும், எழுச்சியையும் பெற காங்கிரஸை உள்ளடக்கிய இண்டியா கூட்டணியை வெற்றி பெற வையுங்கள். புத்துணர்வு கொண்ட புதுச்சேரியை உருவாக்குவோம் என்று பேசினார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தர பாடுபடுவோம்: தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: புதுச்சேரிக்கு மாநில அந்துஸ்து பெற்று தர பாடுபடுவோம். துணைநிலை ஆளுநரின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வருக்கு முழு அதிகாரம் என்பது உறுதி செய்யப்படும்.

நீதிபதி சுசீந்தரன் ஆணை அறிக்கையின் வழிகாட்டுதல்படி, பெண்கள், ஆதிதிராவிடர்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இடஒதுக்கீட்டுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஏஎஃப்டி, சுதேசி, பாரதி பஞ்சாலைகளை நவீனப்படுத்தி ஜவுளி பூங்கா துவக்கப்படும். உலகதரம் வாய்ந்த விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட்டு பயிற்சிகள் தரப்படும்.

புதுச்சேரியை ஒன்றிய நிதிக்குழுவின் வரம்புக்குள் கொண்டு சென்று மற்ற மாநிலங்களில் வழங்கப்படுவது போல் 40 சதவீதம் நிதி பங்கீடு வழங்க வலியுறுத்துவோம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும். மோட்டார் வாகன உற்பத்தி தொடர்பான தொழிற்சாலை துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூரை போல் லுங்கிகள், ரெடிமேடு ஆடைகள் அமைக்கும் தொழில் மையங்கள் உருவாக்கப்படும். அந்த ஆடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உரிய உதவிகள் செய்து தரப்படும். அரசு பேஷன் தொழில்நுட்ப கல்லூரி துவங்கப்படும். எம்எஸ்எம்இ நிறுவனங்கள் வளர்ச்சிக்காக சிறப்பு திட்டங்கள் வடிவமைக்கப்படும்.

நலிவடைந்த தொழிற்சாலைகளை மீண்டும் செயல்படுத்துவதற்காக வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டு மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். புதுச்சேரி, காரைக்கால் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும். மீனவர்களுக்கு நவீன ஆழ்கடல் மீன்பிடி உபகரணங்கள் வழங்கவும், காரைக்காலில் மீன் பதப்படுத்த நவீன பூங்காக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆயிரம் ஸ்டார் என்ற திட்டத்தின் கீழ் ஒவ்வொரு துறையிலும் 1000 பேருக்கு பயிற்சி வழங்கப்படும். முழுமையான பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும். ஒருங்கிணைந்த திடக்கழிவு மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும். கிராம சாாலைகள் தரம் உயர்த்தப்பட்டு முறையாக பராமரிக்கப்படும்.

ஆதரவற்ற முதியோர் நலமுடன் வாழ மகிழ்ச்சி இல்லம் திட்டம் உருவாக்கப்படும். புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய இடங்களில் டிஜிட்டல் வசதியுடன் கூடிய நூலங்கள் அமைக்கப்படும். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் உலகத்தரம் வாய்ந்த கடல் வாழ் உயிரின காட்சியகம் அமைக்கப்படும்.

விவசாயிகளின் பொருளாதார மேம்பாடு சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சந்தன மரம் பயிரிட ஊக்கப்படுத்தப்படும். காரைக்காலை நெற்களஞ்சியமாக அறிவித்து நவீன அரிசி ஆலைகள், தானிய கிடங்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT