தமிழகம்

வேளாண் பட்ஜெட்டோடு திருப்பதி சென்றால் பாவம் போய்விடுமா? - தமிழக அரசுக்கு ஸ்டாலின் கேள்வி

செய்திப்பிரிவு

சென்னை: ‘விவசாயிகளைச் சந்திக்காமல் புறக்கணித்துவிட்டு, வேளாண் பட்ஜெட்டை திருப்பதிக்குத் தூக்கி செல்வதால் உங்கள் பாவங்கள் போய்விடுமா?’ என தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப் பட்டுள்ளதாவது: காவிரி விவசாயிகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தஞ்சையில் திரண்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் இன்னும் தீவிரமாகும்.

விவசாயப் பெருங்குடி மக்களின் உணர்வுகளை உரக்கச் சொல்லும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோழமைக் கட்சித் தலைவர்கள் ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி, நெல்லை முபாரக் ஆகியோருக்கும், அக்கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட தோழர்களுக்கும், பல்வேறு விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் திமுக சார்பில் நன்றி.

ஜூன் 12-ல் வந்து சேர்ந்திருக்க வேண்டிய காவிரி நீர் ஆகஸ்ட் பிறந்தும் வரவில்லை. காவிரி பெருக்கெடுக்க வேண்டிய ஆடிப்பெருக்கு நாளில் டெல்டா விவசாயிகள் ஆதங்கம் பெருக்கெடுக்கப் போராடி வருகின்றனர்.

தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து ஒரு வார்த்தைகூட பேசாத முதல்வரை தமிழகம் இப்போதுதான் பார்க்கிறது.

அண்டை மாநிலத்தில் திரைப்படம் ஓடுவதற்காக நம் விவசாயிகளின் வாழ்க்கையையா அடகு வைப்பீர்கள்?. முழுக் கடன் தள்ளுபடி என வாக்குறுதி தந்து வெற்றி பெற்றுவிட்டு, விவசாயிகளை ஏமாற்றிய மோசடி ஆட்சியாக இந்த தவெக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

மேகேதாட்டு அணை கட்டியே தீருவோம் என அடம் பிடிக்கும் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தைக்குச் செல்ல துடியாய் துடிக்கும் தமிழக முதல்வர், கர்நாடகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் பற்றிய செய்திகளைப் பார்த்தாரா? இங்கு அதேபோல் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட முதல்வருக்கு நேரமில்லையா? விவசாயிகளைச் சந்திக்காமல் புறக்கணித்துவிட்டு, வேளாண் பட்ஜெட்டைத் திருப்பதிக்குத் தூக்கிக்கொண்டு சென்றால் உங்கள் பாவங்கள் போய்விடுமா? நாக்பூரில் நம் விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்குக்கூட கண்டனம் தெரிவிக்காமல், கள்ள மவுனம் காக்கிறார், திரையில் தன்னூத்து விவசாயியாக வேடம் தரித்தவர்.

விவசாயிகளை இனியும் வஞ்சிக்காமல், வாக்குறுதியளித்த படி முழுக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்கி, டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும்.

காவிரியில் தமிழகத்தின் உரிமையைக் காற்றில் பறக்க விடாமல் தீவிரமாகச் செயல்பட வேண்டும். அதுவரை திமுகவின் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT