திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
சென்னை: முன்னாள் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ மயிலை த.வேலு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுக்கு திமுக தலைமை 'செக்' வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அடைந்த பின்னடைவைத் தொடர்ந்து, கட் சியில் அமைப்பு ரீதியான பல்வேறு அதிரடி மாற்றங்களை கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இதன் முதற்கட்டமாக திமுகவின் மாவட்டங்களின் எண்ணிக்கை 77-ல் இருந்து 110 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதில் கட்சிக்குள் செல்வாக்குடன் வலம் வந்த பல முக்கிய நிர்வாகிகளின் அதிகாரங்கள் அதிரடியாகக் குறைக்கப்பட உள்ளன. அந்த வகையில், தலைநகர் அரசியலில் அசைக்க முடியாத அதிகார மையமாகத் திகழ்ந்த முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர் பாபுவுக்கு கட்சித் தலைமை பெரிய செக் வைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இது குறித்து அறிவாலய வட்டாரங்கள் கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அடைந்த தோல்வியின் அதிர்ச்சியில் இருந்து நிர்வாகிகள் இன்னும் மீண்டு வரவில்லை. குறிப்பாக, திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் வெறும் 2 இடங்களில் மட்டுமே திமுக வெற்றிபெற்றது. அதிலும் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியிலேயே தோல்வி அடைந்தது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது குறித்து கட்சித் தலைமை நடத்தியகள ஆய்வில், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரான சேகர் பாபுவின் அலட்சியப் போக்கே கொளத்தூர் தொகுதி தோல்விக்கும், சென்னையில் கட்சி பின்னடைவைச் சந்தித்ததற்கும் முக்கியக் காரணம் எனத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்தே அவரது அதிகாரத்தைக் குறைக்க தலைமை முடிவு செய்துள்ளது.
சென்னை கிழக்கு மாவட்டச் செயலாள ராக இருக்கும் சேகர் பாபுவின் கட்டுப்பாட்டில் எழும்பூர், துறைமுகம், திரு.வி.க. நகர், வில்லிவாக்கம், கொளத்தூர் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருந்தன. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய பட்டியலின்படி, சென்னை கிழக்கு மாவட்டத்தின் கீழ் துறைமுகம், திரு.வி.க. நகர், வில்லிவாக்கம் ஆகிய 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.
கொளத்தூர் மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கி 'சென்னை வடக்கு' என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் கொளத்ததூர் தொகுதி சேகர் பாபுவின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி, புதிதாக நியமிக்கப்படவுள்ள சென்னை வடக்கு மாவட்டச் செயலாளரின் கீழ் செல்லவுள்ளது. இதேபோல், மா.சுப்பிரமணியன், மயிலை வேலு, மாதவரம் சுதர்சனம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலினின் ஆதர வாளர்களான கே.பி.சங்கருக்கு திருவொற்றியூர், ஆர்.கே.நகர் தொகுதிகளும், பரந்தாமனுக்கு வில்லிவாக்கம், எழும்பூர் தொகுதிகளும், இளைஞரணி அமைப்பாளர் பிரபாகர் ராஜாவுக்கு விருகம்பாக்கம், மதுரவாயல் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு புதிய பொறுப்புகள் வழங்கப்பட ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.