சென்னை: ‘முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால்தான், யார் கண்ணில் தென்படுகிறார்களோ அவர்களை எல்லாம் கூட்டணியிலும், கட்சியிலும் சேர்த்து வருகிறார். திமுக என்ற கட்சியே இப்போது மாற்று கட்சியினரால் நிரம்பியுள்ளது. இதனால், காலங்காலமாக திமுகவில் இருக்கும் நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்’ என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் கூட்டணியிலும், கட்சியிலும் சேர்க்கும் அளவுக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 4,000-க்கும் அதிகமான கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்.
ஆங்கில வார இதழ் ஒன்றின் சார்பில் இன்று (2.3.2026) நடந்த நிகழ்ச்சியிலும் இதைத் தெரிவித்திருக்கிறார். இந்து சமய அறநிலையத் துறையின் பணத்திலோ, திமுக அரசின் பணத்திலோ எந்த இந்து கோயிலிலும் கும்பாபிஷேகம் நடக்கவில்லை. இந்து பக்தர்களின் பணத்திலும், கோயில் சொத்துகளில் இருந்து கிடைக்கும் வருவாயில் இருந்தும் தான் கும்பாபிஷேகம் நடக்கிறது.
அதிக வருமானம் வரும் கோயில்களில் மட்டும்தான் திமுக அரசு கவனம் செலுத்துகிறது. வருவாய் இல்லாத கோயில்களில் திருப்பணிகள் செய்ய உள்ளூர் மக்கள், பக்தர்கள் முயற்சி எடுத்தால், அதற்கு அனுமதி கொடுக்க திமுக அரசின் இந்து சமய அறநிலையத்துறை லஞ்சம் கேட்கிறது. இதுதான் திமுக ஆட்சியில் நடக்கும் யதார்த்தம்.
ஆங்கில வார இதழ் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இலவச கர்ப்பபைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம், 75 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு போன்ற திட்டங்களைத் தனது அரசின் சாதனையாகக் கூறியிருக்கிறார். இவையெல்லாம் மோடி அரசின் திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடியின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் மட்டும் இதுவரை தமிழ்நாட்டில் 90 லட்சத்து 36 ஆயிரத்து 355 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது.
மோடி அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதைத் தவிர வேறு எதையும் திமுக அரசு செய்யவில்லை. இதே நிகழ்ச்சியில், வன்முறை, வெறுப்பு பேச்சு, பிற்போக்குவாதம் என பாஜக மீது ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.
முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்களின் புனித சின்னங்களையும், பெண்களையும் இழிவுபடுத்திப் பேசியதை விடவா ஒருவர் வெறுப்பு பேச்சைப் பேசி விட முடியுமா? உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றாமல் அராஜகம் செய்ததைவிடவா ஒருவர் வெறுப்பை கக்க முடியும்?
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யாருக்கு யார் தலைமை தெரியாமல் இருக்கிறார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.
அதிமுக ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என பிரதமர் மோடி கூறியதும் ஒன்றுதான். காங்கிரசுடன் இன்னும் தொகுதிப் பங்கீட்டை திமுகவால் முடிக்க முடியவில்லை. விஜய்யை காட்டி திமுகவை காங்கிரஸ் மிரட்டி வருகிறது. ஒரு சில சதவீத வாக்குகளை வைத்துள்ள காங்கிரஸ் இல்லாமல் வெற்றி பெற முடியாது என்ற பலவீனமான நிலையில்தான் திமுக உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால்தான், யார் கண்ணில் தென்படுகிறார்களோ அவர்களை எல்லாம் கூட்டணியிலும், கட்சியிலும் சேர்த்து வருகிறார். ஆனாலும், காங்கிரஸ் முரண்டு பிடிக்கிறது. திமுக என்ற கட்சியே இப்போது மாற்று கட்சியினரால் நிரம்பியுள்ளது.
இதனால், காலங்காலமாக திமுகவில் இருக்கும் நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். என்னதான் திட்டமிட்டாலும், பொய்களை பரப்பினாலும், ஸ்டிக்கர் ஒட்டினாலும், சிறுபான்மை வாக்குகளுக்காக இந்துக்களை இழிவுபடுத்தினாலும் இந்த தேர்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும். அதிமுக தலைமையில் ஆட்சி மலரப் போவது உறுதி’ எனத் தெரிவித்தார்.