சென்னை: மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். “இன்றைக்கும் நான் அடிவாங்கிய தழும்புகள் எனக்கு இருக்கின்றன. யார் கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: எமர்ஜென்சி காலத்தில் மிசா சட்டத்தை கருணாநிதி எதிர்த்ததால், அன்றிருந்த மத்திய அரசு திமுக ஆட்சியைக் கலைத்தது. உடனடியாக, மிசா சட்டத்தில் என்னைக் கைது செய்வதற்காக கோபாலபுரம் வீட்டுக்கு போலீஸார் வந்தனர்.
அன்று நான் வீட்டில் இல்லை. ‘பிரச்சாரத்துக்கு போயிருக்கிறான், நாளைக்கு வந்துவிடுவான், வந்ததும் நானே போன் பண்ணுகிறேன்’ என்று கருணாநிதி சொல்லி அனுப்பிவிட்டார்.
அடுத்த நாள் நான் வந்ததும், அவரே போலீஸிடம் கைது செய்ய சொல்லிவிட்டார். சிறையில் எனக்குப் பல கொடுமைகள் நடந்தன. எங்களை தொழுநோயாளிகள் இருக்கிற ஒரு சிறிய அறைக்குள்ளே, 10 பேரை அடைத்து வைத்தார்கள்.
ஒரு பானையில்தான் அனைவரும் சிறுநீர் கழிக்க வேண்டும். துர்நாற்றம் வீசும் அந்த இடத்தில்தான் நாங்கள் தூங்க வேண்டும். இரவில் தூங்கவிடாமல் லத்தியால் போலீஸார் அடிப்பார்கள், பூட்ஸ் காலால் மிதிப்பார்கள்.
இன்னொரு பக்கம் ஆயுள் தண்டனை கைதிகளை வைத்தும் எங்களை கொடூரமாக அடிப்பார்கள். அதில், எம்.பி. சிட்டிபாபு சிறையிலேயே இறந்துபோனார். என் தாடை எலும்பு உடைந்துவிட்டது.
நீங்கள்கூட கைவைத்து தாடையைக் காண்பித்தீர்கள் அல்லவா, அது உண்மைதான். இன்றைக்கும் நான் அடிவாங்கிய தழும்புகள் எனக்கு இருக்கின்றன. யார் என்னைக் கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்றவே முடியாது.
சர்க்காரியா கமிஷன்
சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டதற்குப் பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் பலமுறை ஆட்சிகள் மாறின. குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். அரசியலுக்காக கருணாநிதி மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் சொன்ன பொய்யை நீங்களும் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.
அதேபோல், அமலாக்கத்துறை கடிதத்தை எடுத்துக்கொண்டு, அதில் எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகச் சொல்கிறீர்கள்.
அமலாக்கத் துறை குற்றம்சாட்டிய 95 சதவீத வழக்குகளில் இதுவரை குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல், குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் அரசியல் பழிவாங்கலுக்காகவே அமலாக்கத்துறை ஏவப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைக்கு என மாண்பும், மரியாதையும் இருக்கிறது. பல பெரும் தலைவர்கள், மாமனிதர்கள் தமிழகத்தைச் செதுக்கிய இடம் அது. எனவே, தேவையில்லாத சர்ச்சைகளை அங்கு பேச வேண்டாம். நீங்கள் முதல்வரானதும் என்னைச் சந்திக்க வந்தீர்கள்.
அப்போது, “தேர்தல் பிரச்சாரத்தில் உங்களை ரொம்ப விமர்சித்து பேசிவிட்டேன், ஐ அம் சாரி சார்” என்றீர்கள். அதற்கு நான், “பரவாயில்லை பிரதர், அதையெல்லாம் மனசில் வைத்துக்கொள்ளவில்லை; நீங்கள் இப்போது ஒரு மாநிலத்தின் முதல்வர், யாரைப் பற்றி பேசும்போதும் கண்ணியத்தோடு பேசுங்கள்” என்றேன். அதையெல்லாம் மறந்துவிட்டீர்கள்.
சட்டப் பேரவையையே ரீல்ஸ் எடுக்கும் இடமாக மாற்றுவது, நாங்கள் கட்டிய பாலத்தின் மேலே நின்று போட்டோஷூட் பண்ணுவது என்று ஆட்சி நிர்வாகத்தையும் சினிமா ஷூட்டிங் மாதிரியே நடத்துகிறீர்கள். உங்களுடைய திறனற்ற நிர்வாகத்தை மறைக்க இப்படி விதவிதமாக ரீல்ஸ் போட்டு ஒரு தலைமுறையையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால் உண்மை என்ன? உங்கள் ஆட்சியில் தினமும் கொலை, திருட்டு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்று சட்டம் - ஒழுங்கு படுகுழியில் இருக்கிறது. பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து பண்ணி, தமிழகத்தின் வளர்ச்சியை 15 வருஷம் பின்னோக்கி கொண்டு போயிருக்கிறீர்கள்.
விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடி, அனைத்துக் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 6 சிலிண்டர், மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 என பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆட்சியை இழப்பதை திமுக என்றுமே தோல்வியாக நினைத்தது இல்லை. ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல, இதை மக்கள் பணியின் இன்னொரு முகமாகத்தான் நான் பார்க்கிறேன்.
ஆட்சியில் இருக்கிறோமோ இல்லையோ, என்றுமே தமிழகத்தின் உரிமைக்காகவும், வளர்ச்சிக்காகவும் மக்களுக்காகவும் சண்டை செய்துகொண்டே இருக்க வேண்டும்.
அவர்கள் தாத்தாவுக்காகச் சண்டை செய்தோம், அவர்கள் அப்பாவுக்காகச் சண்டை செய்தோம், இப்போது அவர்களுக்காகவே சண்டை செய்வோம். இதுதான் திமுகவின் வரலாறு. அந்த வரலாறு எப்போதுமே மாறாது, மாறவும் கூடாது. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.