சென்னை: ‘தொகுதி மறுவரையறை, தொகுதி எண்ணிக்கை உயர்வு, தற்போதுள்ள விகிதாச்சாரத்திலேயே மாநிலங்களின் தொகுதி அளவு அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாற்றப்படாது என்கிற உறுதிமொழி ஆகியவற்றுக்கான அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்’ என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடாளுமன்றத்திலும் மாநில சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்குவது பரிசீலனையில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2026 மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு தொகுதி மறுவரையறையை மேற்கொண்ட பின்னரே மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் எனும் மத்திய பாஜக அரசின் முந்தைய முடிவிலிருந்து (128-வது அரசியலமைப்புச் திருத்தச் சட்டம், 2023) விலகுவதாக இது அமைந்துள்ளது.
குறிப்பாக, 4 பெரிய மாநிலங்களில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்தே இது செய்யப்படுவதாகத் தோன்றுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள்அமலில் உள்ள நிலையில், இத்தகைய மிக முக்கியமான நகர்வு மேற்கொள்ளப்படுவது முன்னெப்போதும் நாம் கண்டிராதது.
எனினும், திமுகவின் தலைவராகவும், பெண்ணுரிமைக்காக நூறாண்டுகளுக்கும் மேலாக முன்னின்று போராடிவரும் திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசாகவும் இந்த முடிவை எந்த நிபந்தனைகளுமின்றி நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.
அதேநேரம், நியாயமான தொகுதி மறுவரையறை எனும் எங்கள் உரிமையை விட்டுத்தர மாட்டோம் என்பதையும் வலியுறுத்துகிறேன். மாநிலங்களின் தற்போதைய தொகுதி அளவு எந்த நிலையிலும் மாற்றப்படக் கூடாது என்பதுதான் தொடர்ச்சியாக நாங்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடு.
இதனை உறுதிசெய்ய, அடுத்த 30 ஆண்டுகளுக்கும் தற்போதுள்ள தொகுதி அளவு எவ்வித மாற்றமுமின்றித் தொடரும் எனும் உறுதிமொழி அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் வாயிலாக அளிக்கப்பட வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதாலும், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாலும், ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடரை இதற்காகக் கூட்டி, தொகுதி மறுவரையறை, தொகுதி எண்ணிக்கை உயர்வு, தற்போதுள்ள விகிதாச்சாரத்திலேயே மாநிலங்களின் தொகுதி அளவு தொடர்வது, அது அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாற்றப்படாது என்கிற உறுதிமொழி ஆகியவற்றுக்கான அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இவ்வாறு அந்தப் பதிவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.