தமிழகம்

நமது பாரம்பரியப் பெருமைகளை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும்: ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: நமது பாரம்பரியப் பெருமைகளை நாம் முதலில் உணர்ந்து, நமது எல்லைகளைத் தாண்டி பிற நாடுகளுக்கும் பரப்ப வேண்டும் என்று காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் அகில உலக செயல் தலைவர் அசோக் சிங்காலின் நூற்றாண்டு தொடக்க விழா, காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் வட தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் சார்பில் நடைபெற்ற விழாவில் பல்வேறு துறவிகள், இந்து அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

விழாவில் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசுகையில், “நமது பாரம்பரியப் பெருமைகளை நாம் முதலில் உணர வேண்டும்; அதனைத் தொடர்ந்து நமது எல்லைகளைத் தாண்டி பிற நாடுகளுக்கும் பரப்ப வேண்டும். தமிழகத்தில் கிருபானந்த வாரியார் போன்ற பெரியவர்கள் இதற்காக உழைத்தனர்.

ராம ஜென்ம பூமிக்காக செங்கல்லைத் தாங்கி வந்து, காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மஹா பெரியவர் மற்றும் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசி பெற்றுச் சென்றவர் அசோக் சிங்கால். காஞ்சிபுரம் மற்றும் தமிழகத்துக்கு அவர் ஆற்றிய தொண்டுகள் போற்றுதலுக்குரியவை” என்றார்.

இந்த விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், உதாசீன் மடத்தின் பீடாதிபதி கர்ஷினி அனுபவானந்த் மகாராஜ், ஸ்ரீஸ்ரீ சுவாமி ராமானந்த மகாராஜ், ஸ்ரீ ஹனுமன் மாதாஜி, விஸ்வ ஹிந்து பரிஷத் அகில உலகத் தலைவர் அலோக்குமார், விஷ்வ இந்து பரிஷத் தமிழக தலைவர் கோபால்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT