விஜய்
ராமேசுவரம்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நமல் ராஜபக்ச, எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து மகிந்த ராஜபக்சவின் மகனும், இலங்கை எம்.பி.யுமான நமல் ராஜபக்ச விடுத்த வாழ்த்துச் செய்தி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோசப் விஜய் சந்திரசேகருக்கு வாழ்த்துகள். மக்களுக்குத் தேவையான பயனுள்ள திட்டங்களைச் கொண்டு சேர்க்க உங்களுக்கும், உங்களது குழுவினருக்கும் மன வலிமையும், துணிச்சலும் கிடைக்க வாழ்த்துகள்.
மேலும், இரு நாட்டு மக்களையும் பாதிக்கும் பல்வேறு முக்கிய விவகாரங்களில், இலங்கையுடன் வலுவான மற்றும் ஆக்கப்பூர்வமான உறவை வளர்த்தெடுக்க புதிய தலைமை வழிவகுக்கும் என நம்புகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: மக்கள் மையப்படுத்தப்பட்ட அரசியல் பயணத்தைத் தொடங்கும் இந்த முக்கிய தருணத்தில், உங்களுக்குத் தேவையான மனவலிமை, தெளிவான நோக்கம் மற்றும் தொடர்ந்த வெற்றி கிடைக்க வாழ்த்துகள்.
மேலும், இலங்கை மற்றும் தமிழக மக்களுக்கிடையேயான வரலாற்று, கலாச்சார மற்றும் மனிதாபிமான உறவுகள் பல தசாப்தங்களாக வலுவாக இருந்து வருகின்றன. குறிப்பாக இலங்கை எதிர்நோக்கிய பல்வேறு சவாலான காலகட்டங்களில், தமிழக அரசு மற்றும் அதன் மக்கள் வழங்கிய ஆதரவும், ஒத்துழைப்பும் எப்போதும் நினைவு கூரத்தக்கதாகும்.
அந்த வகையில், உங்கள் தலைமையில் தமிழக அரசு இலங்கை மக்களுடன் கொண்டுள்ள நட்புறவை மேலும் வலுப்படுத்தி, இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் பொருளாதார, கல்வி மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்புகளை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நல்லாட்சியும் மக்கள் நலக் கொள்கைகளும் முன்னிலைப்படுத்தப்படும் என நம்புகிறேன். இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.