ராமேசுவரம்: இழுவை மடி விசைப்படகுகளை பாக் நீரிணை பகுதியில் முற்றிலும் தடை செய்ய வேண்டும் என இலங்கை மீனவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து இலங்கை வட மாகாண கடற்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் என். எம். ஆலம் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு எழுதிய கடித விவரம் வருமாறு, 2016-ல் நடந்த இந்திய-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையில் பாக் நீரிணை கடல் பகுதியில் புதிய இழுவைமடி விசைப்படகுகளுக்கு அனுமதி மற்றும் புதுப்பித்தலுக்கு தடை செய்யப்பட்டது. ஆனால், கடந்த தமிழக ஆட்சியில் இது முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை.
இழுவைமடி விசைப்படகுகளுக்குத் தடையாணை பிறப்பித்த பின்னரும் ராமேசுவரம் பகுதி விசைப்படகு உரிமையாளர்கள் தங்கள் படகின் நீளம் மற்றும் குதிரைத் திறனை அதிகரிக்கத் தொடங்கினர். மேலும், இலங்கை பகுதியில் அத்துமீறி நுழைந்து மீனவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். அதேபோன்று நாகை, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த ஆழ்கடல் இழுவைமடி விசைப்படகுகளுடன் வாரத்தில் 7 நாட்களும் இலங்கை கடற்பரப்புக்குகள் அத்துமீறி நுழைந்து இலங்கை மீனவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்.
இந்நிலையில், இழுவைமடி விசைப்படகு மீனவர்களின் அத்துமீறல் குறித்து இலங்கை அரசிடம் அந்நாட்டு மீனவர்கள் வைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், தமிழக விசைப்படகுகள் கடந்த 5 ஆண்டுகளில் அதிக அளவில் சிறைபிடிக்கப்பட்டு மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
ஆனால், கடந்த தமிழக ஆட்சியாளர்கள் விசைப்படகுகள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படுவதை வைத்து அரசியல் மட்டுமே செய்து வந்தனர். இந்திய-இலங்கை மீன்பிடி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக முந்தைய முதல்வர்களுக்குக் கடிதங்களை நாங்கள் எழுதியிருந்தோம். அதற்கு எந்தப் பதில் நடவடிக்கைக்களும் எடுக்கப்படவில்லை.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் பைபர் விசைப்படகுகளை தமிழக மீன்வளத் துறை தடை செய்து ஆணை பிறப்பித்துள்ளது. இதை இலங்கை மீனவர்கள் சார்பில் வரவேற்கிறோம். ஆனால், சில மீனவர்கள் இந்த பைபர் விசைப்படகுகளுக்கு அனுமதி பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதை இலங்கை மீனவர்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்தக் கருத்தில் இந்திய, இலங்கை அரசுகளும், தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யும் தலையிட்டு இருநாட்டு மீன்பிடி பிரச்சினைக்குக் காரணமாக இருக்கும் இழுவைமடி விசைப்படகுகளை பாக் நீரிணை கடலில் முழுமையாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.