சென்னை: ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ எழுத்துத் தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற்ற விளையாட்டு வீரர்கள் உரிய ஆவணங்களை ஜூலை 20-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ப.ஸ்ரீவெங்கடபிரியா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: குறுஞ்செய்தி, மின்னஞ்சல் ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ எழுத்துத் தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற்று தங்கள் ஆன்லைன் விண்ணப்பத்தில் சிறந்த விளையாட்டு வீரர் என்று உரிமை கோரிய விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற விளையாட்டு சாதனை ஆவணங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதுகுறித்த தகவல் அவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும், தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பாணை மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தங்கள் அசல் விளையாட்டு சான்றிதழ்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்கள் அனைத்தையும் படிவம் ஒன்று முதல் 5 வரையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தேர்வாணையத்தின் இணையதளத்தில் ஒருமுறை பதிவு (ஓடிஆர்) வாயிலாக ஜூலை 11 (இன்று) முதல் 20-ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.