தொண்டர்களின் கருத்துக்கு எதிராக முடிவெடுத்தால் என்ன நடக்கும் என்பதற்கு 1996-லேயே தகுந்த பாடம் படித்திருக்கிறது டெல்லி காங்கிரஸ் தலைமை. தற்போது தெரிந்தோ தெரியாமலோ கட்சியை அத்தகையை நிலைக்கு தமிழக காங்கிரஸார் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாகவே காய்களை நகர்த்தி வருகிறது டெல்லி.
1996-ல் அதிமுக-வுக்கு எதிரான மனநிலை தமிழக மக்கள் மத்தியில் அலையடித்தது. அதைப் புரிந்து கொண்ட மூப்பனார், மூழ்கும் கப்பலில் பயணிக்க வேண்டாம் என்ற முன்னெச்சரிக்கையுடன் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என காங்கிரஸ் தலைமைக்கு கோரிக்கை வைத்தார். ஆனால், அப்போதிருந்த காங்கிரஸ் தலைமை அவரது கோரிக்கையை ஏற்கவில்லை. அதனால், வேறு வழியின்றி தமிழக காங்கிரஸை உடைத்து தமிழ் மாநில காங்கிரஸை உருவாக்கினார் மூப்பனார்.
அந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் ரஜினியின் ஆதரவோடு 40 தொகுதிகளில் போட்டியிட்ட தமாகா 39 இடங்களை வென்றது. அதிமுக கூட்டணியில் 60 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்திய காங்கிரஸால் ஒரு இடத்திலும் கரை சேரமுடியவில்லை. அப்போது நடந்த மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்ட 20 தொகுதிகளையும் வென்று சாதித்தது தமாகா.
30 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதேபோன்ற இக்கட்டான சூழ்நிலை காங்கிரஸுக்கு வந்திருக்கிறது. தேர்தல் பேச்சு தொடங்குவதற்கு முன்னதாக சுமுகமாக இருந்த காங்கிரஸ் - திமுக உறவு, இப்போது ஊசலாட்டத்தில் இருக்கிறது. அதிக தொகுதிகள், அதிகாரத்தில் பங்கு என மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட ஒருசிலர் கொளுத்திப் போட்ட நெருப்பு இப்போது ஒட்டுமொத்தமாகப் பற்றிக் கொண்டு எரிகிறது. வெற்றி - தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் தவெக-வுடன் கூட்டணி வைத்தால் தமிழகம் முழுவதும் எழுபது எண்பது தொகுதிகளில் கை சின்னம் களத்தில் நிற்கும். கட்சிக்கும் ஒரு மரியாதை கிடைக்கும் என்ற கருத்தை காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணங்களில் விதைத்துவிட்டார்கள்.
அதேசமயம், விஜய்யின் உண்மையான பலம் என்ன என்பது தெரியாத நிலையில், திமுக உடனான நெடிய அரசியல் பயணத்தை தொடர விரும்பும் முக்கிய தலைவர்கள் சிலர், திமுக கூட்டணி தொடர வேண்டும் என நினைக்கிறார்கள்.
அதனால் தான் தற்போது காங்கிரஸ் சிட்டிங் எம்எல்ஏ-க்களாக இருப்பவர்களின் தொகுதிகளில் திமுக-வை கோபப்படுத்தும் விதமாக எந்தப் பிரளயமும் வெடிக்காமல் இருக்கிறது. ஆனால், கூட்டணிப் பேச்சுவார்த்தையில் காங்கிரஸின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக திமுக பிடிவாதம் காட்டினால், 1996-ல் ஏற்பட்டது போல் இன்னொரு பிளவும் தமிழக காங்கிரஸில் நடக்கலாம். 1996-ல் தொண்டர்களின் விருப்பத்துக்கு ஏற்ப அந்தப் பிளவு நடந்தது. ஆனால், இம்முறை அப்படியான ஒரு பிளவு ஏற்பட்டால் அது பதவிகளை தக்கவைக்கத் துடிக்கும் தலைவர்களால் ஏற்பட்டதாக இருக்கும். அப்போது நடந்த பிளவு இயல்பான ஒன்றாக இருந்தது. இப்போது ஒரு பிளவு ஏற்பட்டால் அதன் பின்னணியில் திமுக-வும் இருக்கும்.
1996-ல் காங்கிரஸில் ஏற்பட்ட பிளவு தேர்தலில் சாதனை படைத்து, ‘தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் தாங்கள் எடுத்த முடிவு தவறு’ என்று டெல்லி காங்கிரஸ் தலைமையை உணர வைத்தது. ஆனால், இப்போது அப்படியான பிளவு ஏற்பட்டால், தேர்தலுக்குப் பிறகு, ‘தலைமை எடுத்த முடிவு சரிதான்’ என பிரிந்து சென்றவர்களை உணரவைக்கும் என்கிறார்கள் தமிழக காங்கிரஸில் இருக்கும் விஜய் விரும்பிகள். அதேசமயம், விஜய்யுடன் தான் கூட்டணி என டெல்லி காங்கிரஸ் தலைமை முடிவெடுத்தால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து செல்வப்பெருந்தகை முதல் நபராகத் தூக்கப்படலாம். அந்த இடம் மாணிக்கம் தாகூருக்கோ அவரது விசுவாசிக்கோ ரிசர்வ் செய்யப்படலாம். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்!