சென்னை: மதுராந்தகம் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதால், டெல்லியிலிருந்து வந்த எஸ்பிஜி குழுவினர் சென்னை விமான நிலையத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தினர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றவுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதற்காக பிரதமர் திருவனந்தபுரத்தில் இருந்து வரும் 23-ம் தேதி பகல் 1.15 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு, நண்பகல் 2.15 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு, மாலை 3 மணிக்கு மதுராந்தகம் பொதுக்கூட்ட திடலுக்கு செல்கிறார்.
மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மாலை 4.30 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்.
அங்கிருந்து மாலை 5.05 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்படுகிறார். பிரதமரின் வருகையை ஒட்டி டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்புப் படை (எஸ்பிஜி) ஏஐஜி அமி சந்த் யாதவ் தலைமையிலான குழுவினர் சென்னை விமான நிலையம் வந்துள்ளனர்.
நேற்று அந்த குழுவினர், விமான நிலையத்தில் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தினர். அந்த கூட்டத்தில் சென்னை மாநகர போலீஸ், மத்திய தொழில் பாதுகாப்புப் படை, மாவட்ட வருவாய்துறை, சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள், மத்திய, மாநில உளவுப் பிரிவினர், முக்கிய பிரமுகரின் பாதுகாப்பு அதிகாரிகள், மருத்துவம் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பிரதமரின் தனி விமானம் வந்து நிற்கும் பகுதி, மதுராந்தகம் செல்ல பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் நிற்கும் பகுதியில் எந்தெந்த அதிகாரிகள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது குறித்து குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பிரதமர் வருவதையொட்டி, 23-ம் தேதி வரை சென்னை விமான நிலையம் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அந்த குழுவினர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சென்று, அங்கு பொதுக்கூட்டம் நடக்கும் பகுதி, பிரதமரின் ஹெலிகாப்டர் வந்து இறங்கும் இடம் ஆகியவற்றையும் ஆய்வு செய்யவுள்ளனர்.