சென்னை: சென்னையில் உள்ள ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் சுவாச பிரச்சினைகள், தூக்கக் குறைபாடுகளுக்கு சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
செவித்திறன் இழப்பு, சுவாச பிரச்சினைகள், தூக்கக் குறைபாடு போன்ற பாதிப்புகள் குழந்தைகளின் பேச்சுத்திறன், கல்வி, வளர்ச்சி ஆகியவற்றை பாதிக்கின்றன.
இத்தகைய சிக்கல்களுக்கு ஆரம்பக்கட்டத்திலேயே முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், சென்னை கிண்டி, அண்ணாநகர் மற்றும் சோழிங்கநல்லூரில் இயங்கி வரும் ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனைகளில், பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) பிரச்சினைகளுக்கு சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இது பச்சிளம் குழந்தைகளுக்கான சுவாச பிரச்சினை, தூக்க குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் சென்னையில் முதல் பிரத்யேக சிறப்பு சிகிச்சை மையமாகும்.
பின்னணி பாடகி சைந்தவி மற்றும் திருவனந்தபுரம் கிம்ஸ்ஹெல்த் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர் சுரேஷ் குமார் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.
இந்த மையத்தில் குழந்தைகளின் சுவாச பாதையை மயக்க மருந்து கொடுக்காமலேயே, மிக மெல்லிய 1.2 மி.மீ எஸ்டோஸ்கோப் கருவி மூலம் பரிசோதிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், புறநோயாளிகள் பிரிவிலேயே மருத்துவர்கள் பரிசோதித்து, சிக்கலான காது, மூக்கு, தொண்டை பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்துவிட முடியும்.
அதேபோல், காக்லியர் இம்ப்லான்ட், சைனஸ் பிரச்சினைகள், தலை, கழுத்து, காது வீக்கம் போன்றவற்றுக்கும் சிகிச்சைகள் இங்கு வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து, மருத்துவமனையின் குழுமத் தலைவர் சி.குணசேகர் கூறுகையில், “குழந்தைகளுக்கு ஒரே இடத்தில் காது, மூக்கு, தொண்டை பிரச்சினைகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் எங்களது எண்ணத்தை இந்த மையம் பிரதிபலிக்கிறது” என்று குறிப்பிட்டார்.
குழந்தைகளுக்கான காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர் ஆர்.நித்யா கூறுகையில், “குழந்தைகளுக்கு ஏற்படும் பல இஎன்டி பிரச்சினைகள் தற்காலிகமானவை என்று அலட்சியப்படுத்தப்படுகின்றன. ஆனால், அவை நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். எனவே, இந்த பிரச்சினைகளை விரைந்து கண்டுபிடிப்பது அவசியம்” என்று தெரிவித்தார்.