படம்: எல். பாலச்சந்தர்

தமிழகம்

அப்துல் கலாம் பிறந்தநாள்: ராமேசுவரம் நினைவிடத்தில் சிறப்பு பிரார்த்தனை

எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 95-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பொது மக்கள் ஆயிரக்கணக்கானோர் மரியாதை செலுத்தினர்.

அப்துல் கலாமின் 95-வது பிறந்த தினம் வியாழக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, ராமேசுவரம் பேக்கரும்பில் அமைந்துள்ள கலாமின் தேசிய நினைவகம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

ராமேசுவரத்தில் உள்ள பேக்கரும்பு அப்துல் கலாம் நினைவிடத்தில் கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு கலாமின் அண்ணன் மகன் ஜெயினுலாபுதின், மகள் நசிமா மரைக்காயர், பேரன்கள் ஷேக் சலிம், ஷேக் தாவூது, மருமகன் நிஜாம் மற்றும் குடும்பத்தினர் இஸ்லாமிய முறைப்படி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதில் அனைத்து சமுதாயத்தவரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தமிழக அரசு சார்பில் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா மற்றும் ராமநாதபுரம் மாவட்டட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அரசு அதிகாரிகளும் மலர் வளையம் வைத்தும், மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த மாணவர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலாமின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி, அவரது தேசிய நினைவகத்தைப் பார்வையிட்டுட்டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT