தமிழகம்

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து: சிறப்பு விசாரணை அதிகாரி நியமனம்

இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 25 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் அருகே உள்ள கட்டனார் பட்டியல் நேற்று மாலை ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 25 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் தங்களது இரங்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ் என்பவரை சிறப்பு விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்துள்ளது. நேற்று நள்ளிரவு அவர் விருதுநகர் வந்தார்.

இன்று காலை விபத்து நடந்த பட்டாசு ஆலையை நேரில் சென்று பார்வையிட்ட சிறப்பு அதிகாரி, விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சுகபுத்திரா முன்னிலையில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது பட்டாசு தொழிலில் விபத்துகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பாக நடத்தவும் தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கவும் அறிவுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்தும் காயம் அடைந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தேர்தல் காலம் என்பதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என்பது குறித்தும் பாதிக்கப்பட்டவர்களிடம் எடுத்துக் கூறினார். இந்த நிகழ்வின்போது சிறப்பு அதிகாரியுடன் மாவட்ட ஆட்சியர் சுக புத்திரர், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT