காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை, இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்புப் பார்வையாளர் ராமன் குமார் ஆய்வு மேற்கொண்டு பெயர்களை சேர்த்தல், திருத்த பணிகளை துரிதமாக மேற்கொள்ள வாக்களார் பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, வரும் ஜனவரி 1, 2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை ஆய்வு செய்ய சிறப்புப் பார்வையாளராக, மத்திய அரசின் கூட்டுறவு அமைச்சக இணைச் செயலாளர் ராமன் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிப் பிரமுகர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் வெளிப்படைத் தன்மை மற்றும் பெறப்பட்ட புகார்கள் குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். பின்னர், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை அவர் நேரில் சென்று கள ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் சார் ஆட்சியர் ஆஷிக் அலி, ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சி.பாலாஜி, மாவட்ட வழங்கல் அலுவலர் பு.விஜயகுமார், மாநகராட்சி மண்டல அலுவலர் எஸ்.முருகதாஸ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
எஸ்ஐஆர் பணிகள் குறித்து சிறப்பு பார்வையாளர் ராமன் குமார் ஆய்வு மேற்கொண்டு பெயர்களை சேர்த்தல், திருத்த பணிகளை துரிதமாக மேற்கொள்ள வாக்களார் பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
திருவள்ளூர் மாவட்டம்: இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்களார் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளு டன் ராமன் குமார் ஆலோசனை நடத்தினார்.
மேலும், வரும் நாட்களில் வாக்களார் சிறப்பு தீவிர திருத்ததில் விடுப்பட்ட பெயர்களை சேர்த்தல், திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக நடைபெறும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
மேலும், திருவள்ளுர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பெரியகுப்பம் டிஇஎல்சி நடுநிலைப் பள்ளியிலும், பூவிருந்தவல்லி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட சுந்தரம் அரசு மேல் நிலைப் பள்ளியிலும் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களார் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள நடைபெற்ற சிறப்பு உதவி மையத்தினை ராமன் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், பொன்னேரி சார் ஆட்சியர் ரவிக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், 9 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.