சென்னை: காசோலை மோசடி வழக்குகளுக்காக, தமிழ்நாடு முழுவதும் இன்று நடத்தப்பட்ட சிறப்பு லோக் - அதாலத்தில், 1606 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு 83 கோடியே 2 லட்சத்து 87 ஆயிரத்து 581 ரூபாய் தீர்வு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியும், தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவருமான நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிக்காரி வழிகாட்டுதலின்படியும், உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு செயல் தலைவருமான நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அறிவுறுத்தலின்படி, நிலுவையில் உள்ள காசோலை மோசடி வழக்குகள் தொடர்பாக, மாநிலம் முழுவதும் இன்று சிறப்பு லோக் அதாலத் நடத்தப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர். ராஜேஷ் விவேகானந்தன் மற்றும் எஸ். கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் இரு அமர்வுகளும், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வில், நீதிபதிகள் திருமகள் சந்திரசேகர், பி.முருகேசன் ஆகியோர் தலைமையில் இரு அமர்வுகளும் அமைக்கப்பட்டன. இதேபோல, மாவட்ட மற்றும் தாலுகா சட்டப் பணிகள் ஆணைக்குழுக்கள் சார்பில், மாநிலம் முழுவதும் 223 அமர்வுகள் அமைக்கப்பட்டன.
இந்த சிறப்பு லோக் அதாலத்-தில், ஆயிரத்து 542 நிலுவை வழக்குகளும், நீதிமன்ற விசாரணைக்கு வராத 64 வழக்குகளும் என, மொத்தம் ஆயிரத்து 606 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன. இதன்மூலம், சம்பந்தப்பட்டவர்களுக்கு 83 கோடியே 2 லட்சத்து 87 ஆயிரத்து 581 ரூபாய் தீர்வுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது என, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் எஸ்.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.