தமிழகம்

வெற்றிப் பயணம் திட்ட பேருந்துகளை அடையாளம் காண்பதில் குழப்பம்!

வீ.தமிழன்பன்

காரைக்கால்: அடையாளம் காண்பதில் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க, வெற்றிப் பயண பேருந்துகளுக்கு தனித்த அடையாளம் வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழக அரசின் வெற்றிப் பயணத் திட்டத்தின் கீழ் மாநகர, நகர பேருந்துகளிலும், புறநகர் சாதாரண பேருந்துகளிலும் மகளிர், திருநர் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து நகரப் பேருந்துகளிலும் (ஏசி தவிர) இலவசம் என்பதால், அவற்றை அடையாளம் கண்டு ஏறுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், புறநகர் சாதாரண பேருந்துகளை அடையாளம் கண்டு ஏறுவதில் சாமானிய மக்களுக்கு, குறிப்பாக கிராமப் பகுதி பெண்களுக்கு குழப்பம் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, பேருந்துகளின் முகப்பு பகுதியில் வெற்றிப் பயணம்' என ஒளிரும் டிஜிட்டல் எழுத்துகளில் குறிப்பிடப்பட்டிருக்கக் கூடிய பேருந்துகளை அடையாளம் கண்டு ஏற வேண்டும் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இந்தப் பேருந்துகளின் முகப்பு பகுதி இடது புற கண்ணாடியிலும் வெற்றிப் பயணம் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் எல்லா சந்தர்ப் பங்களிலும் இதை எளிதாக பார்த்து கண்டறிய முடிவ இல்லை என்கின்றனர்.

இதுகுறித்து சிதம்பரத்தில் இருந்து இருந்து நாகை நோக்கிச் சென்ற பெண் பயணிகள் சிலர் நேற்று கூறியது: பேருந்து நிலையங்களில் நிறுத்தப்பட்டிருக்கும்போது இத்தகைய பேருந்துகளை பொறுமையாக அடையாளம் கண்டு ஏறிவிட முடியும். ஆனால், வழித்தடங்களில் பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும்போது, வேகமாக வந்து நிற்கும் புறநகர் பேருந்துகளில் சட்டென இதைக் கண்டறிய முடிவதில்லை.

சில நேரங்களில் பேருந்துகளில் டிஜிட்டல் எழுத்துகள் ஒளிராமல் இருக்கும் அல்லது பாதியளவு மட்டும் ஒளிரும் நிலை இருக்கும். மேலும் ஸ்டிக்கர் வாசகமோ அல்லது ஒளிரும் டிஜிட்டல் எழுத்துகளின் வாசகமோ, படித்தவர்களுக்கு மட்டுமே புரியும். சாமானிய மக்கள் தெரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

இதனால் வெற்றிப் பயணத் திட்டத்துக்குட்படாத புறநகர் பேருந்துகளில் ஏறிக்கொண்டு நடத்துநரிடம் வாக்குவாதம் செய்யும் நிலை அதிகரித்து வருகிறது. எனவே, இதை கருத்தில் கொண்டு இந்த திட்ட பேருந்துகளின் முன் பின்பக்கங்களிலும், பக்க வாட்டிலும் தனித்த அடையாள குறியீடு பெரிய அளவில் பதிக்கப்பட வேண்டும் அல்லது இந்த பேருந்துகளுக்கு தனித்து வமான வண்ணம் பூச வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT