கோவையில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒப்பந்தப் பேருந்து
கோவை: தீபாவளிப் பண்டிகையையொட்டி, கோவை அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில், ஒப்பந்த அடிப்படையில் சுற்றுலாப் பேருந்துகள், சிறப்புப் பேருந்துகளாக வகைப்படுத்தப்பட்டு வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
தீபாவளிப் பண்டிகை வரும் 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, வெளியூர்களில் வசிக்கும் மக்கள், பண்டிகையை கொண்ட தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பும் வகையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், மாநிலம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, கோவை கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கோவை மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு வழக்கமான 5 ஆயிரம் பேருந்துகளுடன், கூடுதலாக 2,895 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சிறப்புப் பேருந்துகளின் இயக்கம் கோவையில் நேற்று (நவ.5) முதல் தொடங்கியது.
டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் சூலூர் பேருந்து நிலையத்தில் இருந்தும், தென் மாவட்டங்கள் செல்லும் பேருந்துகள் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்தும், மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்தும், நீலகிரி மாவட்டத்துக்கு செல்லும் பேருந்துகள் சாயிபாபாகாலனி புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும், பழநியை மையப்படுத்தி செல்லும் பேருந்துகள் உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட்டு வருகின்றன.
பேருந்துகளின் பற்றாக்குறையை தவிர்க்க, தரமான கட்டமைப்புடன் கூடிய, சமீபத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நகரப் பேருந்துகளும் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. அதேபோல், சொகுசு இருக்கை வசதி கொண்ட சுற்றுலா பேருந்துகளும் ஒப்பந்த அடிப்படையில் நேற்று (நவ.5) முதல் கோவையி்ல் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக கோவை அரசுப் போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறும்போது, ‘‘பயணிகள் நெருக்கடி இன்றி வெளியூர்களுக்கு செல்ல ஏதுவாக வழக்கமான பேருந்துகளுடன், சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
அதன்படி, கோவையில் ஒப்பந்த அடிப்படையில் 30 சுற்றுலா பேருந்துகள் (தனியார் பேருந்துகள்) வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. கோவையில் இருந்து சென்னைக்கு 20 பேருந்துகளும், மதுரை மற்றும் திருச்சிக்கு தலா 5 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
நேற்று முதல் ஒரு சில நாட்களுக்கு இயக்கப்படும். இதில் ஓட்டுநர் அந்த பேருந்தின் ஓட்டுநரே இருப்பார். போக்குவரத்துக் கழக நடத்துநர் பணியில் இருப்பார். அரசுப் பேருந்துக்குரிய கட்டணமே இதிலும் பயணிகளிடம் வசூலிக்கப்படுகிறது.
இப்பேருந்தின் முகப்பிலேயே ஒப்பந்தப் பேருந்து, சிறப்புப் பேருந்து, வழித்தட பெயர்கள் ஆகியவை பெரிய ஸ்டிக்கர்களாக ஒட்டப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் இப்பேருந்துகளும் களத்தில் இயக்கப்பட்டு வருகின்றன’’ என்றனர்.