கோப்புப் படம்

 
தமிழகம்

தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: தெலுங்கு வருடப் பிறப்பு, ரம்ஜான் பண்டிகை என தொடர் விடுமுறை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாளை (மார்ச் 19) தெலுங்கு வருடப் பிறப்பு, சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

          

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 345 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 90 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 24 பேருந்துகளும் இன்று இயக்க திட்டமிடப்பட்டுள்ளது

மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் அன்றைய தினம் 565 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT