சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் |கோப்புப் படம்
திருச்சி: 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஆன்மிக தலங்கள், கோயில்களுக்கு எளிதாக சென்று வர பேருந்து வசதிகள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் சுற்றுலா மேம்பாட்டுக்கான சாத்தியக் கூறுகளை கண்டறிந்து, அதற்கேற்ப புதிய திட்டங்களைச் செயல்படுத்த முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசென்று, நல்ல வளர்ச்சிமிகு திட்டங்களை அறிவிப்போம்.
பூங்காக்கள் அமைப்பது, நதிகளை இணைக்கும் சுற்றுலா முறையை உருவாக்குவது மற்றும் வேளாங்கண்ணி, நாகூர் போன்ற ஆன்மிகத் தலங்களுக்குச் சென்று வருபவர்கள் ஓய்வெடுக்கும் வகையில், வசதிகளை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன.
60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஆன்மிகத் தலங்கள் மற்றும் கோயில்களுக்கு எளிதாக சென்று வர பேருந்து வசதிகள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அரசியல் ஆரோக்கியமாகவும், நாகரிகமாகவும் இருக்க வேண்டும். மூத்த அரசியல்வாதியான நயினார் நாகேந்திரன் தாழ்ந்த விமர்சனங்களை செய்வது மிகப்பெரிய தவறு.
தமிழகத்தில் ஜோக்கர் ஆட்சி நடைபெறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார். முதலில் அவரது கட்சி ஆட்சிக்கு வராமல் போனதற்கான காரணத்தை அவர் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.