சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தாலும் அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனுக்களை பேரவைத் தலைவர் தொடர்ந்து விசாரி்ப்பார் என சட்டப்பேரவைச் செயலர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தவெக அரசுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுகஎம்எல்ஏ-க்கள் பலர் கட்சி கொறடா உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அவர்களை தகுதி நீக்கம் செய்ய பேரவைத் தலைவரிடம் அதிமுக மனு அளித்தது.
இந்த சூழலில் அதிமுக எம்எல்ஏ-க்களான மதுராந்தகம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாகக்கூறி பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்தனர். அவர்களி்ன் ராஜினாமாவை ஏற்று பேரவைத் தலைவரும் உத்தரவிட்டார். அதையடுத்து அவர்கள் 4 பேரும் தவெக-வில் இணைந்தனர்.
தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனு நிலுவையில் உள்ள நிலையில் இந்த 4 எம்எல்ஏ-க்களின் ராஜினாமாவை ஏற்று பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவைச் செயலர் மற்றும் சம்பந்தப்பட்ட 4 அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் சட்டப்பேரவைச் செயலர் சாந்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில்மனுவில், ‘4 அதிமுக எம்எல்ஏ-க்களின் ராஜினாமாவை பேரவைத் தலைவர் ஏற்றுக் கொண்டதால் மட்டுமே அவர்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை செல்லாததாகி விடும் எனக்கூறுவது தவறானது. ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதால் அவர்கள் தகுதி நீக்க நடவடிக்கையில் இருந்து விடுவிக்கப்படுவர் எனக்கூற முடியாது. அவர்கள் ராஜினாமா செய்தாலும் அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரும் மனுக்களை பேரவைத் தலைவர் தொடர்ந்து விசாரிப்பார்.
அந்த விசாரணையில் இறுதி முடிவு எட்டிய பிறகே நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட முடியும். இதன்மூலமாக உருவாகியுள்ள காலியிடங்களுக்கு தேர்தல் நடத்தக்கூடாது என கோருவது ஏற்புடையதல்ல. 4 எம்எல்ஏ-க்களும் தாமாக முன்வந்து அளித்துள்ள ராஜினாமா கடிதங்களை பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டதன், உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் கொள்ள எந்த ஆதாரமும் இல்லை.
பேரவைத் தலைவர் சட்ட ரீதியாக தனது அரசியல் சாசன கடமையைத்தான் நிறைவேற்றியுள்ளார். பேரவைத் தலைவர் ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டதற்கு எந்த அவசரமும் இல்லை, உள்நோக்கமும் இல்லை. ராஜினாமாவை ஏற்பதற்கு முன்பாக தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனு மீது முடிவு எடுக்க வேண்டும் என எந்த விதிகளும் இல்லை. தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனுக்களை பேரவைத் தலைவர் குறித்த காலத்துக்குள் விசாரித்து முடிவு எடுப்பார் என்பதால் இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கில் இசக்கி சுப்பையா தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற 3 எம்எல்ஏ-க்கள் பதில்மனு தாக்கல் செய்யாததால், இந்த வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு வரும் ஜூலை 13-க்கு தள்ளி வைத்துள்ளனர்.