புதுச்சேரி: புதுச்சேரியில் பேனர் தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தனது பிறந்தநாளுக்காக வைக்கப்பட்ட பேனரை தாமே முன்னின்று சட்டப்பேரவை தற்காலிக தலைவர் அன்பழகன் அப்புறப்படுத்தினார்.
பருவமழை தொடங்கவுள்ளதால் புதுச்சேரியில் இன்று முதல் பேனர், கட்அவுட், விளம்பர பலகைகள் வைக்க தடை விதித்து துணை நிலை ஆளுநர் உத்தரவின்படி, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் குலோத்துங்கன் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி, புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
இதனிடையே புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட சோனாம்பாளையம் சந்திப்பில் புதுச்சேரி அதிமுக மாநில செயலாளரும், சட்டப்பேரவை தற்காலிக தலைவருமான அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் பேனர்களை வைத்திருந்தனர். இன்று இந்த பேனர்களை அன்பழகன் தாமே முன்னின்று தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அகற்றினார்.
முன்னதாக அவர் கூறும்போது, “புதுச்சேரி உள்ளாட்சி, பொதுப்பணி, வருவாய்த் துறையினர் தங்களின் கடமையை சரிவர செய்வதில்லை. ஆட்சியாளர்களை திருப்திபடுத்துவதற்காக பேனர் தடை சட்டத்தை முறையாக இதுவரையிலும் நடைமுறைப்படுத்தவில்லை.
இந்தச் சூழலில், ஆட்சியர் வழக்கம்போல் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். திறந்வெளி பேனர் சட்டம் 2002-ம் ஆண்டு சட்டப்பேரவையில் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது மாவட்ட ஆட்சியரின் பொறுப்பு. இதில் காலக்கெடு ஏன்?
என்னுடைய பிறந்தநாளுக்கு, எனது ஆதரவாளர்கள் பேனர் வைத்தால் வைக்க வேண்டாம் என்று நான் கூற முடியாது. நான் அப்படிச் சொன்னால், மற்ற பேனர்களை சுட்டிக் காட்டி என்னையே திட்டுவார்கள். அனைத்து அமைப்பினர் பேனர் வைப்பார்கள். அந்த பேனருக்கு காவல் துறையினரே பாதுகாப்பு அளிப்பார்கள். பேனரை கிழித்தால் வழக்குப்பதிவும் செய்வார்கள். ‘ஏன் பேனர் வைத்தீர்கள்?’ என்று கேட்க மாட்டார்கள். இதுதான் புதுச்சேரியின் நிலைமை.
எனவே, அனைத்து அரசியல் கட்சினருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் வகையில் நானே எனக்கு வைத்த பேனரை அப்புறப்படுத்துகிறேன். என்னுடைய பிறந்த நாளுக்கு யாரும் பேனர் வைக்க வேண்டாம் என்ற வேண்டுகோளையும் வைக்கிறேன்” என்று தெரிவித்தார்.