சென்னை: சட்டப்பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார்.
தமிழகத்தில் அமைந்த 17-வது சட்டப்பேரவையின் முதல் பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கைக்கான கூட்டத்தொடர், ஆக.5-ம் தேதி தொடங்கியது. அன்று பொது நிதிநிலை அறிக்கையும், 6-ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டன.
ஆக.5-ம் தேதி நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுவின் முடிவின்படி, அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து பேரவையில் ஆக.12-ம் தேதி வரை நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று, அதைத்தொடர்ந்து, துறைகள்தோறும் மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஆக.17-ம் தேதி தொடங்கியது.
அன்று முதல் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் காலை முதல் மாலை வரை தொடர்ந்து துறைகள்தோறும் விவாதங்கள், அமைச்சர்கள் பதிலுரைகள் நடைபெற்றன. விவாதத்தின் இடையே நிதி ஒதுக்கச்சட்ட மசோதா உள்பட 11 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் அமைச்சர்கள் பதிலுரை அளித்தனர். அதைத் தொடர்ந்து பேரவை நிகழ்வுகள் குறித்த அறிக்கையை பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் வாசித்தார்.
தொடர்ந்து, பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையன் முன்மொழிந்தார்.
இதையடுத்து, பேரவை மீண்டும் கூடும் தேதி குறி்ப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத்தலைவர் ஜேசிடி.பிரபாகர் அறிவித்தார்.
எதிர்க்கட்சிகளுக்கு கூடுதல் நேரம்
சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், பட்ஜெட் மீதான பொது விவாதம் மற்றும் மானியக் கோரிக்கை விவாதங்களில் ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேசுவதற்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டதாக பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார்.
28 நாட்களில் 32,055 பேர் வருகை
பார்வையாளர் வருகை தொடர்பாக பேரவை தலைவர் ஜேசிடி.பிரபாகர் பேசும்போது, ‘‘கடந்த 2021-ம் ஆண்டு 22,651 பேரும், 2023-ல் 21,130 பேரும், 2024-ல் 10,754 பேரும், 2025-ம் ஆண்டு 20,123 பேரும் பேரவை நிகழ்வுகளை பார்வையிட்டுள்ளனர். ஆனால், இந்த ஆண்டு கடந்த 28 நாட்களில் மட்டும் 32,055 பேர் சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை பார்வையிட்டிருக்கிறார்கள்.
சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டாலும், நிகழ்வுகளை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வம் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
விடுமுறை எடுத்துக்கொண்டு கூட பேரவையை காண வந்துள்ளனர். பொதுவாழ்வில் ஈடுபட வேண்டும் என்ற மிகப்பெரிய ஆர்வம் இளைஞர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது’’ என்றார்.