சென்னை: பதவி விலகிய அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேரிடமும் விளக்கம் கேட்டு சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி என 2 அணிகளாக அதிமுக பிரிந்தது. சட்டப்பேரவையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக கொறடா உத்தரவை மீறி வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் 25 பேர், தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எனவே, அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பழனிசாமி தரப்பில் சட்டப் பேரவைத் தலைவர் ஜேசிடி. பிரபாகரிடம் மனு அளிக்கப்பட்டது. இதேபோல, பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி தரப்பில் பேரவைத் தலைவரிடம் புகார் கொடுக்கப்பட்டது.
இதற்கிடையே பழனிசாமியை, வேலுமணி தரப்பினர் சந்தித்து, கொறடா உத்தரவை மீறியதற்காக வருத்தம் தெரிவித்து முறைப்படி மன்னிப்பு கடிதம் வழங்கினர். இரு தரப்பினரும் பேரவைத் தலைவரை சந்தித்து பரஸ்பரம் தாங்கள் கொடுத்த புகார் மனுக்களை திரும்பப் பெறுவதாக கூறினர்.
இதை ஏற்று, தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை கைவிடப்படுவதாக சட்டப்பேரவைத் தலைவர் அறிவித்தார். அதேநேரம், பதவி விலகிய 4 எம்எல்ஏக்கள் (ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சத்தியபாமா, மரகதம் குமரவேல்) மீதான தகுதி நீக்க மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த 4 பேரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேரவைத் தலைவர் பிரபாகர் கூறும்போது, ‘‘எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த 4 பேரிடம் விளக்கம் கேட்டு ஜூன் 9-ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒருவாரம் அவகாசம் தரப்பட்டுள்ளது. அவர்கள் தரும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவர், கொறடா தேர்வு ஆய்வில் உள்ளது. கூட்டத்தொடர் தொடங்கும் முன்பு இதற்கான அறிவிப்பு வெளியாகும்’’ என்றார்.