கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி
கோவை: அதிமுகவில் துணைப் பொதுச் செயலாளர் பதவியை ஏற்க முடியாது என முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான எஸ்.பி.வேலுமணி நிர்வாகிகளிடம் பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அதிமுக கட்சியில் தலைமை நிலைய செயலாளராகவும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராகவும் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ பணியாற்றி வந்தவர் எஸ்.பி.வேலுமணி. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் தலைமையிலான எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 26 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
கட்சி தலைமையை மீறியதால் இவர்களின் கட்சிப் பதவிகளை பொதுச்செயலாளர் பழனிசாமி பறித்தார். குறிப்பாக, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன.
பின்னர், இவர்களில் சிலரை தவிர, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பினர். அதேசமயம் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருக்கு பழைய பதவிகள் வழங்கப்படவில்லை. இவர்கள் வசம் இருந்த கட்சி ரீதியான மாவட்ட எல்லைகளும் மாற்றியமைக்கப்பட்டு, புதியவர்கள் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டனர்.
நீண்ட தாமதத்துக்கு பிறகு எஸ்.பி.வேலுமணிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் பதவி மீண்டும் வழங்கப்படாததால் எஸ்.பி.வேலுமணி அதிருப்தியடைந்தார். தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். அது தொடர்பான செய்தி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்தக் கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் இன்று (ஜூன் 30) வைரலாக பரவியது.
அந்த வீடியோவில் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, ‘‘என்னை நம்பி வந்தவர்களை விட்டுவிட்டு, நான் பதவி வாங்க தயாராக இல்லை. என்னுடன் 30 மாவட்ட செயலாளர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு பதவி வழங்கவில்லை. நான் மட்டும் துணைப் பொதுச்செயலாளர் பதவியை எப்படி ஏற்றுக் கொள்ள முடியுமா?
என்னை நம்பி பின்னால் நின்றவர்கள் கஷ்டப்பட்டவர்கள். வீரமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், சிவி.சண்முகம் ஆகியோர் அந்தந்த மாவட்டங்களின் ஜாம்பவான்கள். செலவு செய்து கட்சியை வளர்த்தவர்கள். அவர்களுக்கு எல்லாம் பதவி வழங்கவில்லை. அவர்கள் என் பின்னால் நிற்கின்றனர். பின்னர், நான் எப்படி பதவி ஏற்க முடியும்’’ என்றார்.
இதற்கிடையே, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது விமான நிலையத்தில் அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு எஸ்.பி.வேலுணி பதில் கூறும்போது, ‘‘சென்னைக்கு புதியதாக செல்லவில்லை. வாரத்துக்கு இரு நாட்கள் செல்கிறேன். ஒரு பரபரப்பும் இல்லை. பரபரப்பு நீங்கள் தான் செய்து கொண்டு இருக்கீறர்கள். அதிமுகவில் நாங்கள் இருக்கக்கூடாது என முடிவு செய்து ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றீர்களா எனத் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் செய்தியாளர்களிடம் நிச்சயம் தெரிவிக்கிறேன்’’ என்றார்.