சென்னை: ‘அதிமுகவில் இருந்து நிர்வாகிகளை நீக்கிய பழனிசாமியின் அறிவிப்பு செல்லாது. நீக்கப்பட்டவர்கள் அவரவர் பொறுப்புகளில் தொடர்வார்கள்’ என அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி வேலுமணி, துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக இன்று தனிப்பட்ட சுயலாபத்துக்காகவும், பதவி வெறிக்காகவும் செயல்படும் ஒரு சிலரால் இந்த எஃகுக் கோட்டையின் அடித்தளம் அசைத்துப் பார்க்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது.
அதைத்தொடர்ந்து, பெரும்பான்மையான சட்டப்பேரவை உறுப்பினர்களும், முக்கிய நிர்வாகிகளும் பொதுச் செயலாளர் பழனிசாமியைச் சந்தித்து, அவரது தன்னிச்சையான முடிவுகளால்தான் இந்தத் தோல்வி நேர்ந்தது என்று கூறி, தோல்விக்கான காரணத்தை ஆராய அவசர பொதுக்குழு மற்றும் செயற்குழுவைக் கூட்ட வலியுறுத்தினோம். முக்கியமாக திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்றும் வலியுறுத்தினோம்.
இதற்கு பொதுச் செயலாளர் உடன்படாததால் கருத்து வேறுபாடு தொடங்கியது. கடந்த 11-ம் தேதி அன்று பழனிசாமி, தற்காலிக பேரவைத் தலைவரை சந்தித்து 17 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக மனு அளித்ததன் மூலம் இந்தப் பிளவு பொதுவெளியில் தெரிந்தது. அதனால், 30 உறுப்பினர்கள் எங்கள் தரப்பு ஆதரவுக் கடிதத்தை வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கட்சியின் முன்னோடிகள் உள்ளிட்ட 28 பேரை ஒரே கையெழுத்தில் நீக்கி பழனிசாமி அறிவித்துள்ளார். தேர்தல் ஆணைய மற்றும் நீதிமன்ற சட்டப்படி, ஒரு இயக்கத்தில் பிளவு ஏற்பட்ட நிலையில், ஒருவரை நீக்கவோ அல்லது சேர்க்கவோ இரு பிரிவினருக்கும் அதிகாரம் கிடையாது.
கடந்த 2017-ம் ஆண்டிலும் இதேபோன்ற அறிவிப்புகள் செல்லாது என்று நீதிமன்றத்தாலும், தேர்தல் ஆணையத்தாலும் அறிவிக்கப்பட்டது. எனவே, பழனிசாமி வெளியிட்ட பதவி நீக்க அறிவிப்புகள் செல்லாது. நீக்கப்பட்டவர்கள், அவர்கள் வகித்த அதே பொறுப்புகளில் தொடர்வார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பழனிசாமி அழைத்தால் பேச தயார்
எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, உண்மை நிலையை இந்த நேரத்திலும் உணராமல் அறிக்கை விட்டிருப்பது என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தங்களின் வார்த்தைகளை, தம்பிகளாக நாங்களும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டோம். ஆனால் தோல்வி வந்த பிறகு, தலைமை பொறுப்பில் இருப்பவர் இறங்கி வந்து எல்லோரிடமும் பேச முன்வந்திருக்க வேண்டும். அதை விடுத்து எப்போதும் போல ‘நான் மட்டுமே எல்லாம்’ என்ற நிலையில் பேசிக் கொண்டிருப்பதை உணர்வுள்ள எந்த அதிமுக தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.
மக்கள் ஆதரவு பெற்ற தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பது என்ற அரசியல் அறத்தோடு அதிமுகவின் ஆதரவை பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்கள் வழங்கியுள்ளோமே தவிர, யாரையும் அவமரியாதை செய்யும் எண்ணமோ, அதிமுகவை பிரிக்கும் எண்ணமோ எங்கள் யாருக்கும் இல்லை. இப்போதும் நீங்கள் அழைத்தால், பேச நாங்கள் தயார்.
தோல்விக்கான காரணங்களை எல்லோரும் சேர்ந்து ஆராய்வோம். அதிமுகவின் எதிர்காலப் பாதையை அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிப்போம். தங்களிடம் நாங்கள் கேட்பது ஒன்றுதான். ‘போங்க போங்க’ என்று எப்போதும் போல விரட்டியடிக்காமல், ‘வாங்க வாங்க’ என்று ஒருமுறை அழைத்து பாருங்கள். எல்லாமே மாறும்.. கட்சியும் நல்லா இருக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.