எஸ்.பி.வேலுமணி
கோவை: “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்” என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (ஜூலை 2) கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “நாங்கள் தலைமைக்கு அனுப்பிய கடிதத்தில் அனைத்து விஷயங்களையும் தெளிவாக கூறியுள்ளோம்.
கட்சிக்காக உழைத்தவர்கள், அந்தந்த மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர் காலத்தில் இருந்து உழைத்தவர்கள், தற்போதைய பொதுச் செயலாளர் பழனிசாமிக்காக உழைத்தவர்கள் ஆகியோருக்கு பதவிகள் வழங்கப்படவில்லை.
அதனால் நான், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உட்பட அனைவரும் எங்களுக்கு வழங்கப்பட்ட பதவிகள் வேண்டாம், தொண்டர்களாக தொடர்கின்றோம் என சொல்லி இருக்கின்றோம். அதை தெளிவாக கடிதத்தில் சொல்லி இருக்கின்றோம். நாங்கள் அதிமுக உறுப்பினராகவே தொடர்கின்றோம்.
மகளிரணி கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி எப்போதும் அழைப்பு விடுப்பார். ஆனால், நேற்று முன்தினம் கூட்டத்துக்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால், அதற்கு முன்னரே நாங்கள் கடிதம் கொடுத்து விட்டோம். அதனால் எங்களை அழைக்கவில்லை என நினைக்கிறேன்.
நான் சொன்ன ஜாம்பவான்களுக்கு அர்த்தம் வேறு. கட்சிக்காக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் உழைத்தவர்கள். பழனிசாமிக்காக களத்தில் உழைத்தவர்கள், கட்சியை வளர்த்தவர்கள் என்ற கருத்தில் சொன்னேன்.
கடந்த 4-ம் தேதி பதவி எல்லாம் கொடுப்பார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால், கொடுக்கவில்லை. அவர்களிடமே பதில் கேளுங்கள். எங்களை பொறுத்தவரை கடிதத்தில் தெளிவாக சொல்லி இருக்கின்றோம். இன்னும் இந்தக் கட்சி நன்றாக இருக்க வேண்டும். அனைவரையும் ஒருங்கிணைத்து பொதுச் செயலாளர் பழனிசாமி செயல்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.