தமிழகம்

“பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஏன் இவ்வளவு குறைவான நிதி ஒதுக்கீடு?” - பேரவையில் சவுமியா கேள்வி

தமிழினி

சென்னை: “பட்ஜெட்டில் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாதது பெரிய ஏமாற்றம் அளிக்கிறது. 5 கோடி விவசாய மக்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ததும் மிகக் குறைவான தொகை. சாப்பாடு போடுகிற விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் ஏன் இவ்வளவு குறைவாக நிதி ஒதுக்கி உள்ளீர்கள்” என பேரவையில் சவுமியா அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் சட்டப்பேரவையில் பேசுகையில், “தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான கூட்டுறவு கடன் மொத்தமாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு வராமல் இருந்தது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுக்கிறது.

தமிழகத்தின் மக்கள் தொகை 8 கோடி இருக்கலாம். அதில் விவசாயம் செய்பவர்கள 5 கோடியாக இருப்பார்கள். ஆனால், வேளாண் பட்ஜெட் ரூ.14,000 கோடிக்கு மட்டும் தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது மிகமிகக் குறைவு. கால்நடை,பால்வளம், வனத்துறை, கூட்டுறவு உள்ளிட்ட 22 துறைகளுக்கும் சேர்த்து ரூ.58 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளீர்கள். ஆனால் வேளாண் துறைக்கும் வெறும் ரூ.14,000 கோடி தான்.

2 மணி நேரம் வேளாண் பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் தாக்கல் செய்தார். நாங்கள் எதிர்பார்த்த விசயங்கள் அதில் இல்லை. சாப்பாடு போடுகிற விவசாயிகளுக்கு பட்ஜெட் ஏன் இவ்வளவு குறைவாக ஒதுக்கி உள்ளீர்கள். நீர்ப் பாசன திட்டங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும்.

பாலாறு, காவிரி ஆறு உள்ளிட்ட 35 ஆறுகளில் 10 கி.மீக்கு ஒரு தடுப்பணை கட்டலாம். அப்படிக் கட்டினால், கடலில் கலக்கும் நீரை சேமிக்கலாம்; நாம் கேரளா, கர்நாடகா என யாரிடமும் தண்ணீருக்காக கையேந்த வேண்டியதில்லை. தமிழகத்தில் 42,000 ஏரிகள் இருந்தது; தற்போது 27,000 ஏரிகள் தான் இருக்கிறது. இதை சரியாக தூர்வாரினாலேயே 100 முதல் 150 டிஎம்சி தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

மகளிர், விவசாயிகளுக்கான திட்டங்கள், இயற்கை விஞ்ஞானி விருது அறிவிப்பை வரவேற்கிறேன். பதிவு செய்த விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டம் வழங்கப்படவில்லை. அதை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். நிறைய மானியங்களை அறிவித்துள்ளீர்கள். ஆனால் அது 1 ஏக்கர், 2 ஏக்கர் வைத்திருக்கும் சிறிய விவசாயிகளுக்கு தெரியாது. 20, 30 ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு தான் இது குறித்து தெரியும். அவர்கள் தான் இதை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

விவசாயத்தைப் போல மனித வளமும் தமிழகத்துக்கு முக்கியம். வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் நிறைய இருக்கும் என எதிர்பார்த்தோம். லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். நிறைய பேர் தேர்வு எழுதிவிட்டு, காத்துக்கிடக்கிறார்கள்;

அவர்களுக்கு அரசு வேலை என்பது கானல் நீராக தான் உள்ளது. இவை பட்ஜெட்டில் இருக்கும் என எதிர்பார்த்தோம்; ஆனால் இல்லை. டாஸ்மாக் கடைகளை படிப்படியாக எதிர்பார்க்கிறோம். நான், வேறு எதுவுமே கேட்கவில்லை. தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரிநீர் திட்டத்தை கொண்டு வாருங்கள்; விவசாயிகளை கைவிட்டுவிடாதீர்கள் ” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT