சவுமியா அன்புமணி
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பசுமை தாயக தலைவரும், தருமபுரி பாமக எம்எல்ஏவுமான சவுமியா அன்புமணி மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: நீட் தேர்வு மற்றும் மும்மொழிகொள்கை குறித்து பிரதமரிடம் முதல்வர் விஜய் பேசாதது குறித்து கேட்கிறீர்கள். தமிழகத்தின் கோரிக்கைகளை டெல்லிக்கு கொண்டு செல்ல வேண்டும். மேகேதாட்டு அணை தொடர்பாக பாமக கொள்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீர் மேலாண்மை குறித்தும் பாமக தலைவர் அன்புமணி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். மழை நீரை சேமித்து விவசாயத்தை செழிக்க வைப்பது எப்படி என்பது குறித்தும் தெரிவித்துள்ளார்.
இதற்காக சட்டப் பேரவையிலும் குரல் கொடுப்போம், வெளியேயும் குரல் கொடுப்போம். பாமக ஆதரவுடன் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏ.க்கள் 4 பேர், தவெகவில் இணைந்திருப்பது ஆரோக்கியமான அரசியலா என கேட்கிறீர்கள். இது வரவேற்கத்தக்க விஷயமல்ல, துரதிஷ்டவசமான விஷயம் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
ஒரு வேட்பாளரின் பெயரை வைத்து யாரும் வாக்களிக்கவில்லை. சின்னத்தை வைத்துதான் வாக்களித்துள்ளனர். வெற்றி பெற்ற நபர்கள் அந்த சின்னத்துக்கும், அந்த கட்சிக்கும் உரிய மரியாதையையும், முக்கியத்துவத்தையும் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.